உலகம்

போர்க்குற்றம் சுமத்தப்பட்ட 28 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – இலங்கைக்கான அறிக்கையில் ஐ.நா தெரிவிப்பு!

ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்செலட் முன்வைக்கவுள்ள இலங்கைக்கான அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியாக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியினால், முன்னாள் இராணுவ மற்றும் புலனாய்வு பிரிவின் 28 அதிகாரிகள், நிர்வாக பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த ஆண்டு, போர்க்குற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில், அவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து செயற்பாடுகளிலும் இராணுவ மயமாக்கல் நிலைமையை அவதானிக்க முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையில் இலங்கையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக, மாற்று சர்வதேச பொறிமுறைகள் குறித்து ஆராயுமாறு, மனித உரிமைகள் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய முறையில் அவதானம் செலுத்தப்படாதுள்ளமை, மீண்டும் அவ்வாறான மனித உரிமை மீறல்கள் ஏற்படுவதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2030ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பில், இலங்கை அரசாங்கம் இணங்கிக் கொண்டமைக்கு புறம்பாக, தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படும் நிலைமை நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சட்டத்தரணிகள், மனித உரிமைகள் காவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்ற நிலைமை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட தரப்பினர் குறித்து ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு அரசாங்கங்கள் நியமித்த வெவ்வேறு ஆணைக்குழுக்கள் விசாரணைகளை நடத்திய போதும், உண்மைகளை நம்பகத்தன்மையை வெளிக் கொண்டு வரவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் தவறிவிட்டன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் தேசிய அளவில் தீர்வு காண்பதற்கான இயலாத நிலையிலும், ஆர்வமற்றத் தன்மையிலும் இருப்பதால், சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக, சர்வதேச சமூகம் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாகவும், ஊக்குவிப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்செலட் தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு அமைவாக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை விதிப்பது தொடர்பான எச்சரிக்கைகள் காணப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்துள்ளன.

எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த அறிக்கைக்கான பதில் நிலைப்பாட்டை நேற்று மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles