உலகம்

ஹம்பந்தோட்டை கடற்பரப்பில் பாறையை தட்டிய அபுதாபி கப்பல் : விசாரணைகள் ஆரம்பம்!

அபுதாபி துறைமுகத்தில் இருந்து இலங்கையின் திருகோணமலைக்கு சீமெந்து உற்பத்தி செய்வதற்கான பொருட்களை கொண்டு சென்ற எம்.வி யுரோசன் கப்பல், சின்ன இராவணன் கோட்டை கடலில் நேற்று பிற்பகல் பாறை தட்டியது.

தற்போது இந்த கப்பலை கண்காணிக்கும் பணிகளில் கடற்படை மற்றும் விமானப்படை இணைந்துள்ளன.

கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மற்றும் மீட்பு குழு படகு நேற்றைய தினம் சம்பவ இடத்திற்கு அனுப்பபட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதவிர, இலங்கை விமானப்படையின் உலங்கு வானுர்தி ஒன்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கடற்படை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையத்தில் இருந்து செயற்பாட்டு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த கப்பலில் 33,000 மெற்றிக் டொன்னுக்கும் அதிகமான சீமெந்து உற்பத்திக்கான பொருட்கள் மற்றும் 720 மெற்றிக் டொன் டீசல் என்பன இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, கப்பலில் 18 பணிக்குழாமினர் இருந்துள்ளதாகவும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கப்பல் பாறையை தட்டியதால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் எரிபொருள் என்பன தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக கடல் சுற்றுச்சுழல் பாதுகாப்பு அதிகார சபையின் முகாமையாளரான கலாநிதி டேர்னி பிரதீப் இதனை தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles