உலகம்

இராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரேசில் ஜனாதிபதி

‘இந்தியா போன்ற ஒரு நண்பரை பெற்றதை பெருமையாக கருதுகிறோம்’

இந்தியாவினால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு பிரேசில் ஜனாதிபதி, ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தஇடத்தில் உள்ள பிரேசிலுக்கு நேற்று முன்தினம் 20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்தது.

இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எட்வர்டோ பசுல்லோ வரவேற்றார்.

Brazil President invokes Ramayana to thank India for vaccine supply - The Federal

இதையடுத்து, பிரதமர் மோடிக்கு பிரேசில் ஜனாதிபதி, இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தனது சமூக வலைத்தளத்தில் ராமாயண சம்பவத்தை சித்தரிக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.

இராமாயணத்தில், போரில் லட்சுமணன் காயமடைந்தபோது, அவரது உயிரை காப்பாற்றும் சஞ்சீவி மூலிகையை தேடிச்சென்ற அனுமன், அதை கண்டுபிடிக்க முடியாமல் மலையையே தூக்கி வந்தார்.

அதை குறிப்பிடும்வகையில், கொரோனா தடுப்பூசிகள், தடுப்பு மருந்து அடங்கிய குப்பிகள் ஆகியவை கொண்ட மலையை இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு அனுமன் தூக்கிச் செல்வதுபோல் அந்த படம் அமைந்துள்ளது.

 

அதனுடன், பிரேசில் ஜனாதிபதி தனது பதிவில், ‘‘வணக்கம், பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா போன்ற ஒரு நண்பரை பெற்றதை பெருமையாக கருதுகிறோம். தடுப்பூசி ஏற்றுமதி செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

அதற்கு பிரதமர் மோடி, டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதி்ல், ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் பிரேசிலின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளியாக இருப்பது எங்களுக்குத்தான் பெருமை. சுகாதாரத்துறையில் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்’’ என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, கொரோனா சிகிச்சைக்காக, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பிரேசிலுக்கு இந்தியா வழங்கிய போதும், இதே போன்று இராமாயண சம்பவத்தை குறிப்பிட்டு, பிரேசில் ஜனாதிபதி நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles