இலங்கையின் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர்நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க, எதிர்க்கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
உயர்நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதியரசர் ஆயத்தின் ஏகமனதாக குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளதாகவும் நீதியரசர்கள் ஆயத்தின் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற வான்ப்படை அதிகாரி சுனில் பெரேரா ஆகியோரினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு அமைய, சட்டமா அதிபரால் பிரதிவாதியான ரஞ்சன் ரமாநாயகவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரிமாளிக்கையில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட ரஞ்சன் ராமநாயக்க, நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் பெரும்பாலானோர் மோசடியாளர்கள் என குறிப்பிட்டிருந்தார்.
அந்த கருத்தின்மூலம் ரஞ்சன் ராமநாயக்க, நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பு மீது மக்கள் வைத்திருந்த நள்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ளதாக மனுதாரர்கள் முன்வைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த வழக்கு பல சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனிமைப்படுத்தலுக்காக நீர்கொழும்பு – பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கொரோனா தடுப்பு சுகாதார விதிகளுக்கு அமைய, கைதி ஒருவரை சிறையில் அடைப்பதற்கு முன்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இதன்அடிப்படையில் அவர் நீர்கொழும்பு – பல்லசேனயில் உள்ள இளம் குற்றவாளிகள் சீர்த்திருத்த மையத்தில் நடத்தப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் முகாமிற்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இவர் அண்மையில் தனக்கு மொத்தமாகக் கிடைத்த 40 லட்சம் ரூபா நாடாளுமன்ற அமர்வுப்படியை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.