உலகம்

“இல்லத்தரசிகளுக்கு ஊதியம்” – கமல்ஹாசனின் திட்டம் வேதனையானது என்கின்றார் கங்கனா

கமல்ஹாசனின் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கங்கனா ரணாவத் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழக சட்ட சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன் தமது 7 அம்சத் திட்டங்களை வெளியிட்டார்.
இதில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டம் குறித்து கமல் தெரிவித்துள்ளார்.

“பெண் சக்தி திட்டம், பல முறை நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் ஒன்றுதான்.

ஆனால், அதைக் கிண்டலடிக்கும் போக்கு உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் ‘பெய்ஜிங் அறிவிப்பு’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் ‘பெண் சக்தி’ என்கிற திட்டம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் அந்தத் திட்டம், சாத்தியமுள்ள செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டம்” என்று குறிப்பிட்டார்.

இல்லத்தரசிகளுக்கு அரசாங்கம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது என பலரும் தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கங்கனா ரணாவத், பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

குறித்த பதிவில்,
“எங்கள் அன்புக்குரியவர்களுடன் நாங்கள் கொள்ளும் உறவுக்கு ஒரு விலை அட்டையை ஒட்டாதீர்கள். எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்ப்பதற்குச் சம்பளம் வேண்டாம். எங்களுக்கே உரித்தான ஒரு குட்டி ராஜ்ஜியத்தில் நாங்கள் ராணியாக இருக்க எங்களுக்கு சம்பளம் வேண்டாம்.

எல்லாவற்றையும் தொழிலாக பார்க்காதீர்கள். மாறாக உங்கள் மனைவியிடம் நேசிக்கும் பெண்ணிடம் சரணாகதி ஆகிவிடுங்கள். பெண்களுக்குத் தேவை நீங்கள் கொடுக்கும் மரியாதையும், பகிரும் அன்பும்தான். சம்பளம் அல்ல. என்றும்,

“ஓர் இல்லத்தரசியை சம்பளம் பெறும் கூலித் தொழிலாளியாகத் தரம் குறைப்பது அவளது நிலையை இன்னும் மோசமடையவே செய்யும். அவளுடைய அன்புக்கு, தாய்மை நிறைந்த தியாகங்களுக்கு விலைப் பட்டியல் இடுவது கடவுளுக்கு காசு கொடுக்க நினைப்பதற்குச் சமமானது.

இந்த உலகைப் படைக்க இத்தனை மெனக்கெட்ட கடவுள் மீது பரிதாபப்பட்டு சம்பளம் கொடுப்பதும், இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் கொடுக்க நினைப்பதும் சமமானதே. இரண்டுமே வேடிக்கையானது, வேதனையானது’’. என தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles