இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிக அபாயமிக்க பகுதிகளின் அடையாளப்படுத்தப்பட்ட தகவல்கள் அடங்கிய புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த 14 நாட்களில் இலங்கையின் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் பதிவான கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொறு 14 நாட்களுக்கு ஒருதடவை வெளியிடப்படும் இவ் வரைப்பட்த்தில் இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினம் 468 பேருக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 451 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணியில் 16 பேருக்கும் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ஒருவருக்கும் கொரோனாதொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 45,242 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 7,212 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை நிலையங்களில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 565 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனாதொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,817 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்றையதினம் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின.
இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் இவ் இரு மரணங்களும் பதிவாகின.
இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட சுவாச நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் நோய்த்தொற்றின் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கடந்த 02ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இரத்தினபுரியை சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கு கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிமோனியா மற்றும் வலிப்பு நோய் காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொரோனாமரணங்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்வடைந்துள்ளது.