உலகம்

இலங்கையில் 2 கொரோனா மரணங்கள் பதிவு : கொழும்பு , கம்பஹாவில் சில பகுதிகள் விடுவிப்பு

இலங்கையில் நேற்றையதினம் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.


நேற்றையதினம் கொழும்பு 15 பகுதியயைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணொருவரும் வெலிப்பன்ன பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில், நாளாந்தம் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற போதிலும் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டுள்ள பகுதிகள் அபாயமற்றவையாக இனங்காணப்படும் போது அவ்வாறான பகுதிகள் வாராந்தம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

அதற்கமைய கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் முகத்துவாரம் பொலிஸ் பிரிவும் , வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் புதுக்கடை மேற்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள், பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு, மிரிஹான பொலிஸ் பிரிவில் தெமலவத்தை (புறக்கோட்டை) என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

கம்பஹா மாவட்டத்தில் பேலியகொட பொலிஸ் பிரிவில் பேலியகொடவத்தை கிராம சேவகர் பிரிவு, மீகஹாவத்தை கிராம சேவகர் பிரிவு, பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவும் றோஹண விகாரை மாவத்தையும் , பேலியகொட கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நெல்லகஹாவத்தை மற்றும் பூரண கொட்டுவத்தை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஸ்ரீ ஜயந்தி மாவத்தை பகுதியும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகிறது.

இவை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மறு அறிவித்தல் வரை அவ்வாறே காணப்படும் என்றும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 403 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 774 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 41 031 தொற்றாளர்கள் இரண்டாம் அலையுடன் தொடர்புடையவர்களாவர்.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 37 252 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 7309 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை 436 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இலங்கையில் 213 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles