உலகம்

இலங்கையில் கொரோனா மேலும் ஒருவர் பலி! திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி!

இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 231 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம்20 மாவட்ங்களைச் சேர்ந்த 592 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்படவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 245 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 140 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 66 பேரும் அடங்குகின்றனர்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 470 பேரும், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 18 பேரும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய மூன்று பேருக்கும், ஈரானில் இருந்து நாடு திரும்பிய நாடு திரும்பிய ஒருவருக்கும் கொவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 8 ஆயிரத்து 478 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் 686 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 568 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினம் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

அகலவத்தை பகுதியை சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

கொவிட் 19 தொற்றால் குருதி விசமானமையே அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வடைந்துள்ளது.

பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு 11 இடங்களில் ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி பென்தொட்ட பாலத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த மாணவரின் தந்தை களுத்துறை தெற்கு காவற்துறை நிலையத்தில் பணியாற்றுகின்ற நிலையில், குறித்த நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜென் பரிசோதனையில் மேலும் 3 பேருக்கு தொற்றுறுதியானது.

திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி!
இலங்கையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளின் கொள்ளளவில் 25 சதவீதமான பார்வையாளர்களை மாத்திரம் அனுமதித்து, அவற்றை இயக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாக, தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Hot Topics

Related Articles