உலகம்

இலங்கையில் கொரோனா நிலைவரம் : திருகோணமலைக்கு செல்ல வேண்டாம் !

இலங்கையில் கொரோனா பரவல் தொடர்ந்தும் நீடித்துவரும் நிலையில் நேற்றையதினம் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 184 ஆக இலங்கையில் அதிகரிகத்துள்ளது.

இதேவேளை, வெல்லம்பிட்டிப் பகுதியில் தனிமைப்படுத்தலில் இருந்த லக்சந்த செவன வீட்டுத்தொகுதி இன்று காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இலங்கையில், நேற்றைய தினம் (23-12-2020 ) மொத்தமாக 579 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 507 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய 72 கொரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து பதிவாகியுள்ளது.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 38,638 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு ‍தெரிவித்துள்ளது.

இதேவேளை பேலியகொட – மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 34,960 ஆக பதிவாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 582 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதன் காரணமாக கொரோனா தொற்றிலி இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 29,882 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 8,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 536 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இரு சிசுக்குள் மற்றும் 15 வயது சிறுவன் அடங்கலாக 184 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் கொரோனா தொற்றின் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஆணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் 2020 டிசம்பர் 21 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் இரத்தம் நஞ்சானமை மற்றும் புற்று நோய் நிலையென என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்திலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் வெளிப்பிரதேசங்களிலிருந்து அங்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 70 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே இம் மாவட்டத்தில் வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதால் பண்டிகை காலங்களில் மாவட்டத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட அதிபர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், திருகோணமலையில் அபயபுர, முருகபுரி கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் சில நாட்களில் சிவனொளிபாதமலை புனித யாத்திரைக்கான பருவ காலம் ஆரம்பமாகவுள்ளது.

அத்தோடு அடுத்த வாரமளவில் சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் வைரஸ் பரவல் அபாய நிலைமை காணப்படுவதால் ஜனவரி மாதம் யாத்திரை வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் நுவரெலியா மாவட்டத்திலும் கணிசமானளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் ஜனவரி மாதம் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட கொவிட் தடுப்பு குழு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் நகரத்தை அண்மித்த பகுதிகளில் தொற்று பரவல் தீவிரமாகக் காணப்படுவதால் சுகாதார தரப்பினரால் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு , போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையைக் கருத்திற் கொண்டு சிவனொளிபாதமலை யாத்திரை வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட மக்கள் இச்சந்தர்ப்பத்தில் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிப்பதுடன் ஒன்று கூடல் உட்பட அநாவசிய பயணங்களில் இருந்து தவிர்ந்து வைரசை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை சுகாதாரத் துறை அடையாளம் கண்டுள்ளதால், அவசர காரணம் தவிர, திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரவிருக்கும் விடுமுறை நாட்களில் பயணத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கொவிட் -19 வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முடிவுகளை எடுக்க மாகாணக் குழுவின் கூட்டத்தில் அவர் பேசினார்.

இதற்கிடையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திருகோணமலையில் சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த ஆளுநர் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தினார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறும் எவருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துமாறு பாதுகாப்பு படையினருக்கும் அழைப்பு விடுத்தார்.

மேலும், திருகோணமலை மாவட்டத்திற்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை குறித்து சிறப்பு கவனம் செலுத்தவும், தற்போது நிறுத்தப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் ஆளுநர் பாதுகாப்புப் படையினரைக் கேட்டுக்கொண்டார்.

இதில் மாகாண பிரதம செயலாளர் துசித பி.வனிகசிங்க, திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாண்டிகோரளா மற்றும் ஆளுனரின் செயலாளர் எல்.பி. மதனநாயக்க மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. லதாஹரன், பாதுகாப்பு படைகளின் மற்றும் ஆயுதப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்கள்.

Hot Topics

Related Articles