கிராம சக்தி மற்றும் மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடல்

இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக்க அநுருத்த அவர்களின் பிரசன்னத்துடன் 2020 டிசம்பர் 18 ஆம் திகதியன்று, தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மாதிரிக் கிராம மற்றும் மூன்று கிராம சக்தி வீட்டுத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான பொறிமுறைகளை நெறிப்படுத்தும்  புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே மற்றும் கிராமிய வீடமைப்பு & நிர்மாணம் மற்றும் கட்டிட பொருட்கள் உற்பத்தி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்த்தன ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை இத்திட்டங்களை துரிதகதியில் அமல்படுத்துவதற்காக தவணைக் கொடுப்பனவுகளை முற்பண கொடுப்பனவுகளாக வழங்குவதற்கு வழிவகுக்கும்.

Image

  1. இலங்கை ரூபா 1.2 பில்லியன் மொத்த பெறுமதியில் நான்கு வீடமைப்புத் திட்டங்கள் நாடளாவிய ரீதியிலுள்ள வீடற்றவர்கள், குறைந்த வருமானத்தை பெறுவோர் போன்றவர்களுக்காக 2400 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல இலங்கையின் 25 மாவட்டங்களிலும்  600 வீடுகள் மாதிரிக் கிராம வீடமைப்பு  திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.  வடமாகாணத்தில் மேலதிகமாக 600 வீடுகளும் அதேபோல தென்மாகாணத்தில் 1200 வீடுகளும் இரண்டு கிராம சக்தி வீடமைப்புத் திட்டங்களின் கீழ் நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த நான்கு நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் ஏற்கனவே 96 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சகல  திட்டங்களும் இலங்கை அரசின்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மூலமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

  1. இந்திய அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுவரும் முன்மாதிரி வீடமைப்புத்திட்டத்தின் கீழ் 50,000 வீடுகள் ஏற்கனவே பூர்த்தியாக்கப்பட்டுள்ள நிலையில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் 4 வீடமைப்புத்திட்டங்கள் அதற்கு மேலதிகமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோல இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் மற்றொரு திட்டத்தின்கீழ் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Image

  1. இலங்கையில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி உதவி திட்டங்கள் அனைத்தும் மக்களை இலக்காகவும் சமூகங்களை சார்ந்ததாகவும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதுவரையில் இந்திய அரசாங்கம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அபிவிருத்தி உதவிதிட்டங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் 560 மில்லியன் அமெரிக்க டொலர் முற்று முழுதான நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்திய அரசினால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்கள் அனைத்தும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, சுகாதாரம் மற்றும் மருத்துவ பராமரிப்பு, கைத்தொழில் அபிவிருத்தி, வாழ்வாதாரம் மற்றும் புகலிடம், போக்குவரத்து, தொழில் பயிற்சி மற்றும் கலை, விளையாட்டு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Hot Topics

Related Articles