இருள் சூழ்ந்த குகைக்குள் கிடைத்துள்ள ஒரு வெளிச்சம் தான் கொரோனா தடுப்பூசி என உலக சுாகதார ஸ்தாபனத்தின் அவசரகாலத் திட்டங்களுக்கான நிர்வாக இயக்குநர் மைக் ரயான் ஜெனீவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசியானது கொரோனா தொற்றுக்கான முழுமையான தீர்வு அல்ல என உலக சுாகதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்திருந்தார்.
இவ் இரண்டு கருத்துகளும் கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திய போதிலும் ஒரு கவலையையும் முன் வைக்கின்றது.
எம் ஒவ்வொருவரது மனதிலும் தோற்றும் அந்த கவலை கொரோானா தடுப்பூசி எனக்கு எப்போது கிடைக்கும் என்பது தான்.
சோதனைகளில் 95% சாதகமாக முடிவுகளை காண்பித்துள்ள ஃபைசர் / பயோஎன்டெக் கோவிட் தடுப்பூசி இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்டு அந்நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டமும் ஆரம்பமாகியுள்ளது.
எனினும் இது போன்று உலகின் அனைத்து நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக பெற்றுக்கொடுக்க முடியுமா? என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது.
எம்மை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வாழும் மக்களுக்கு தடுப்பூசி பெற்று கொடுப்பது குறித்து இது வரை எந்த சமூகநல அமைப்புகளும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் முன்வர வில்லை,
எமது நாட்டில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ் வரவு செலவு திட்டத்தில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் எந்த முன்மொழிவுகளும் இல்லை.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரினால் கேள்வி எழுப்பப்பட்ட போது உலக சுகாதார அமைப்பினால் அங்கீராம் வழங்கப்படும் போது எமது நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என ஆழும் கட்சியினால் தெரிவிக்கப்பட்டது.
தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ள ஃபைசர் / பயோஎன்டெக் கோவிட் தடுப்பூசி -70 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் பேணப்பட்டால் மட்டுமே அதன் செயற்திறன் பாதிக்கப்படாமல் இருக்கும்.
இந்நிலையில், தற்போது இலங்கைக்கு அந்த வசதி இல்லை. இதே வேளை வைரஸ் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இதுவரை எந்தவொரு தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
ஆகவே, உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படும் வரை இலங்கை எந்த கோவிட் -19 தடுப்பூசியையும் பெறாது என்றும் அங்கிகரிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீரா அண்மையில் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இலங்கையில் ரஷ்ய மற்றும் சீன கொரோனா தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடல்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைத்துறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன நேற்று இடம் பெற்ற ஊடகங்க வந்திப்பில் தெரிவித்திருந்தார்.
எனினும் தடுப்பூசியை எமது நாட்டிற்கு கொள்வனவு செய்வதற்கு பெறும் தொகை பணத்தை செலவிட வேண்டி ஏற்படலாம்.
ஏற்கனவே கடன் சுமை காரணமாக நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகைக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெற்றுக்கொடுப்பது என்பது நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கலாம்.
அவ்வாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் பட்சத்தில் நாம் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட முடியும் என்ற கனவு அனைவர் மனதிலும் உள்ளது. அது தான் எமது அனைவரது எதிர்ப் பார்ப்பும் கூட.
ஆனால் அவ்வாறு எமது நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நாம் எப்படியான சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
நாம் ஒவ்வொருவரும் எமக்கான தடுப்பூசிக்கு பணம் செலுத்த வேண்டி ஏற்படுமானால் அந்த தொகை எவ்வளவாக இருக்கும்? அவ்வாறு நம்மில் வசதி படைத்தவர்கள் முன்கூட்டியே கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்களாயின் அவர்கள் ஏனையவர்கள் குறித்து பொறுப்புடன் செயல்படுவார்களா?
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு அவரின் நோய் எதிர்ப்பு சக்கி அதிகரிக்கப்பட்டு கொரோனாவுக்கு எதிராக செயற்பட்டு அவரை உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கின்றது.
எனினும் கொரோனா வைரஸானது மனிதரில் இருந்து மனிதருக்கு பரவுவதை எந்த ஒரு தடுப்பூசியினாலும் கட்டுப்படுத்த முடியாது.
உதாரணமாக வேலைக்காக வெளியில் செல்பவருக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், அவர் அதிலிருந்து பாதுகாக்கப்படலாம். எனினும் அவரை சார்தவர்கள், வயோதிபர்கள் மற்றும் நாற்பட்ட நோய் நிலைமைகளை உடையவர்கள் அவரின் பொறுப்பற்ற நடத்தை காரணமாக பாதிக்கப்பட கூடிய வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமின்றி தற்போது வரை கிடைத்த தகவலின் படி ஒவ்வாமை உடையவர்களுக்கு இவ் தடுப்பூசி வேறு சிக்கல்களையும் தோற்றுவிக்கின்றது.
எனவே இவ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள உடல் தகுதி இல்லாதவர்களும் எம்மில் அடையாளம் காணப்படலாம். இவ்வாறானவர்களும் பாதிக்கப்படலாம்.
எனவே தான் உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா தடுப்பூசி, தொற்றுக்கான தீர்வு அல்ல என்பதுடன் சுகாதார விதிமுறைகளை தொடர்ந்தும் கடைபிக்கும் படி வலியுறுத்தி வருகின்றது.
நாம்மில் பலரும் இதுவரை கொரோனாவிற்கான சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதற்கான முக்கிய காரணம் ஒன்று தனது உயிர் மீது உள்ள பயம். மற்றும் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கை ஆகியன தான்.
ஆனால் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், அதன் பின்பும் நாம் சமூகப் பொறுப்புடன் செயல்படுவோமா என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.
நமது நாட்டில் நமக்கு முகம் தெரியாதவர்களாக இருந்தாலும் ஒருவரோ, சிலரோ கொரோனாவால் உயிரிழந்து கொண்டிருக்கின்றார்கள்.
அந்த உறவுகளின் அருகில் சென்று ஆறுதல் கூறும் அளவிற்கு நாம் இல்லாவிட்டாலும் இந்த நிலையில் இருந்து எது நாட்டை மீட்டெடுக்க எம் ஒவ்வொருவராலும் இயலும்.
நாட்டில் இறுதி கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு அவர் குணமடையும் வரை நாம் கொரோனாவுக்கு எதிரான சுகாதார நடை முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அடிக்கடி சவர்க்காரமிட்டு முறையாக கைகளை கழுவுதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் என்பன கொரோனாவுக்காக மட்டுமன்றி ஏனைய தொற்றுநோய்களிலிருந்தும் எமக்கு பாதுகாப்பளிக்கின்றமை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உண்மை. கொரோனாவிற்கு பின்பும் நாம் சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது சிறந்ததே.
எனவே தடுப்பூசியைமட்டும் நம்பியிருக்காமல் எமது உறவுகளின் உயிர்பலியை தடுத்து கொரோனாவை வெற்றிகொள்ள நாம் ஒவ்வொருவம் ஒன்றினைவோம்!