உலகம்

இலங்கையும் கொரோனாவும் – அதிகரிக்கும் மரணங்களும் தொற்றாளர்களும்

 

  • கொழும்பில் 6 தொடர்மாடி குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு
  • 6 தொடர்மாடி குடியிருப்புக்களில் 4774 வீடுகளில் 264 தொற்றாளர்கள்
  • நேற்றையதினம் 2 மரணங்கள் பதிவு

 

கொழும்பு மாவட்டத்தில் சுமார் 50 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 தொடர்மாடி குடியிருப்புக்கள் நேற்று சனிக்கிழமை காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

எனினும் அந்த தொடர்மாடி குடியிருப்புக்கள் அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும் , அவை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மட்டக்குளி ரந்திய உயண, முகத்துவாரம் மெத்சந்த உயன மற்றும் மிஹிஜய செவன, கிராண்ட்பாஸ் முவதொர உயன மற்றும் சமகிபுற , தெமட்டகொட மிஹிந்து சென்புற ஆகிய தொடர்மாடி குயிருப்புக்களே இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த 6 குடியிருப்புக்களிலும் உள்ள 4774 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 264 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , அவர்களை அங்கிருந்து வேறுபடுத்தியுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.

13 தொடர்மாடி குடியிருப்புக்கள் சுமார் 50 நாட்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. வீட்டிலிருந்து கூட வெளியில் வர முடியாதளவிற்கு இவர்கள் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தமையால் ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுத்து அபாயமற்றவற்றை விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அதற்கமைய தற்போது 6 தொடர்மாடி குடியிருப்புக்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளன.

முகத்துவாரம் – மெத்சந்த உயன

அதற்கமைய முகத்துவாரத்தில் மெத்சந்த உயன தொடர்மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இங்கு 986 வீடுகள் உள்ளன. இவ்வனைத்து வீடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 86 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஒவ்வொரு வீடுகளில் உள்ளவர்கள் அல்ல. சுமார் 50 – 60 வீடுகளில் தொற்றாளர்கள் முதற்கட்டமாக இனங்காணப்பட்ட போது அந்த வீடுகளில் ஏனையோருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே எஞ்சியோருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டது.

மட்டக்குளி – ரந்திய உயன

அதே போன்று மட்டக்குளி பிரதேசத்தில் ரந்திய உயண தொடர்மாடி குடியிருப்பும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இங்கு 1264 வீடுகள் உள்ளன. இங்கு அனைத்து வீடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 40 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டது.

முகத்துவாரம் – மிஹிஜய செவன

முகத்துவாரம் மிஹிஜய செவன தொடர்மாடி குடியிருப்பும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 554 வீடுகளில் 680 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது 78 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

கிராண்ட்பாஸ் – முவதொர உயன

கிராண்ட்பாஸ் முவதொர உயண தொடர்மாடி குடியிருப்பும் விடுவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 870 வீடுகளில் அனைத்திலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 24 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டது.

கிராண்ட்பாஸ் – சமகிபுற

இப்பிரதேசத்திலேயே காணப்படும் சமகிபுற தொடர்மாடி குடியிருப்பும் விடுவிக்கப்பட்டுள்ளதோடு , இங்கு 260 வீடுகள் உள்ளன. இவை அனைத்திலும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இருவருக்கு மாத்திரமே தொற்றுறுதி செய்யப்பட்டது.

தெமட்டகொட – மிஹிந்து சென்புற உயன

தெமட்டகொட மிஹிந்து சென்புற உயன தொடர்மாடி குடியிருப்பும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதோடு , இங்குள்ள 840 வீடுகளில் 917 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 34 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் போது இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் உடனடியாக அந்த குடியிருப்புக்களிலிருந்து வேறுபடுத்தப்பட்டு , அவர்களது குடும்பத்திலுள்ள ஏனையோருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய இந்த பகுதிகளை ஒழுங்குமுறைக்கமைய விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவற்றில் தற்போது எந்த தொற்றாளர்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள குடியிருப்புக்கள்

இவை தவிர மேலும் 7 தொடர்மாடி குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. எனினும் இவற்றில் பெருமளவிலான நபர்கள் இல்லை.
தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து தொடர்மாடி குடியிருப்புக்களிலும் மூன்றில் இரண்டு பகுதியினர் விடுவிக்கப்பட்ட தொடர்மாடி குடியிருப்புக்களில் உள்ளவர்களாவர்.
எஞ்சிய ஒரு பகுதியினர் மாத்திரமே ஏனைய 7 குடியிருப்புக்களிலும் உள்ளனர். எதிர்வரும் 48 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்குள் இவற்றிலும் முழுமையாக பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுத்து அவற்றையும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொலிஸ் பிரிவுகள்

மேற்கூறப்பட்ட தொடர்மாடி குடியிருப்புக்கள் மாத்திரமே தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் அவை அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவை குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும்.

போக்குவரத்து தடை குறித்து

இதே வேளை பண்டிகை காலம் ஆரம்பமாகவுள்ளதால் போக்குவரத்து தடை அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படலாம். ஆனால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்றார்.

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 760 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,135 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 674 பேர் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

அதனால் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 28,502 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து 81 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வருகை தந்த மூவரும், இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வருகை தந்த ஒருவரும் நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 473 பேர் பூரண குணடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 23,304 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 8,682 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருதுடன், சந்தேகத்தின் பேரில் 485 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதனிடையே இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 149 ஆக பதிவானது.

01. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய ஆண் நபராவார். வெலிசரை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையிலிருந்து கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கும் அதன் பின்னர் முல்லேரியா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார். அத்தோடு அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்று நிமோனியா நிலையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. இம்புல்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான ஆண் நபர். ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 டிசம்பர் 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் உயர் நீரிழிவு நோய் நிலைமை மற்றும் கொவிட் தொற்று நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று பதிவான மரணம்

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலயில் இருந்து கொவிட் 19 தொற்றுக்குள்ளானவராக இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர்

நேற்று சனிக்கிழமை காலை வரை முப்படையினரினால் நடத்தப்படும் நிர்வகிக்கப்படும் 66 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 6,810 பேர் தனிமைப்படுத்தலில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

Hot Topics

Related Articles