உலகம்

இலங்கையில் கொரோனா மரணங்களும் கொரோனா நிலைவரமும்

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலையில் வைரஸ் பரவல் தீவிரமடைந்த போதிலும் , சுகாதாரதுறையினரின் ஆலோசனைகளுக்கு அமைய அபாயமுடைய பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் இதுவரை 31,375 அதிகரித்துள்ளதுடன் நேற்றையதினம் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. அத்துடன் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், கொவிட் தொற்றுக்குள்ளாகிய நிலையில், முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முல்லேரியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், கடந்த 10 ஆம்ம் திகதி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இரத்த அழுத்தம், நியூமோனியாவுடனான கொவிட் தொற்றே இந்த உயிரிழப்புக்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் கொவிட் 2 ஆவது அலையினால் உயிரிழக்கும் வயதெல்லையும் வெளியாகியுள்ளது.

இலங்கையில் அதிகளவில் 71 வயதிற்கும் அதிகமானோரே, கொவிட் 2 ஆவது அலையினால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

71 வயதிற்கு அதிகமான 64 பேர் கொவிட் தொற்றின் 2 ஆவது அலையினால் உயிரிழந்துள்ளனர்;.

61 முதல் 70 வயதான 27 பேர் கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0-9 வயதுக்கு இடைப்பட்ட ஒருவரே கொவிட் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இரு வாரங்களுக்கு முன்னர் தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் 2021 ஜனவரி முதல் முன்பள்ளிகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி சேவை இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இதே வேளை சாரதியொருவருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து கிருமி நீக்கல் நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்திலும் மாற்றங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க நேற்றைய தினமும் 762 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 687 தொற்றாளர்கள் பேலியகொடை கொத்தணியுடனும் , எஞ்சிய 75 தொற்றாளர்கள் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 31,375 ஆக உயர்வடைந்துள்ளதோடு , இவர்களில் 27 747 தொற்றாளர்கள் இரண்டாம் அலையில் இனங்காணப்பட்டோர் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 22 831 நபர்கள் குணமடைந்துள்ளதோடு , 8398 நபர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 604 நபர்கள் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளியன்று பதிவான மரணங்கள்

கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது பெண்ணொருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட இதய பாதிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பெண்ணொருவர் டுபாயிலிருந்து வந்ததையடுத்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்ததுடன் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோய் நிலைமை அதிகரித்தமை மற்றும் கொவிட் நிமோனியா நோய் நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 146 ஆக உயார்வடைந்துள்ளது.

கண்டியில் மீள திறக்கப்படும் பாடசாலைகள்

கண்டி நகர எல்லைக்குள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தரம் 6 ஆம் தரம் தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எனினும் கண்டி கலைமகள் வித்தியாலயம் , திருத்துவக்கல்லூரி மற்றும் தக்ஷிலா கல்லூரி ஆகிய 3 மாத்திரம் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் ஆளுனர் கூறியுள்ளார். இந்த பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரியில் முன்பள்ளிகளை ஆரம்பிக்க தீர்மானம்

2021 ஜனவரி மாதம் முன்பள்ளிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் , எனினும் சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை இது குறித்த தீர்மானங்களை அமுல்படுத்த முடியாதுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பணிகள் வழமைக்கு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வழமையான கடமைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் காலவரையறை இன்றி மூடப்பட்டிருப்பதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்தில் எந்த வித உண்மையும் இல்லையென்று பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பணியாற்றும் சாரதி ஒருவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக கடந்த 08 ஆம் திகதி பி.சீ.ஆர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதற்கமைவாக இவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கு அமைவாக இவர் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தார்.

அன்றைய தினம் சாரதியுடன் தொடர்புப்பட்டவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் இதுதொடர்பாக கிடைக்கப்பெற்ற அறிக்கையில் இவர் தொடர்புப்பட்ட யாருக்கும் கொவிட் – 19 தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே கடந்த 9 ஆம் திகதி கிறுமி நீக்கம் செய்வதற்காக மாத்திரம் அலுவலகம் மூடப்பட்டதாகவும், மீண்டும் 10 ஆம் திகதி தொடக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தனது வழமையான சேவைகளை முன்னெடுத்துள்ளது.

தனிமைப்படுத்தல் காலத்தில் மாற்றம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான தனிமைப்படுத்தலுக்கான நாட்கள் 28 இல் இருந்து 14 ஆக குறைக்கப்பட உள்ளதாகாகவும் இது தொடர்பிலான அறிவிப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் விடுக்கப்பட இருப்பதாகவும் கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய முறைகளுக்கு அமைவாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர். பரிசோதனையில் அவர் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மீண்டும் வீட்டுக்கு சென்று 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்
தனிமைப்படுத்தலில் இருந்து கொழும்பு, முகத்துவாரத்தில் அமைந்துள்ள மெத்சந்த செவன, மிஹிஜய செவன, கொழும்பு மட்டக்குளி பகுதியில் அமைந்துள்ள ரந்திய உயன, கிராண்ட்பாஸில் உள்ள மோதர உயன மற்றும் – சமகிபுர, தெமட்டகொடயில் உள்ள மிஹிந்துசெத்புர ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles