உலகம்

வேரும் இறக்கையுமான தாயும் தந்தையும்

நீங்கள் இப்போது ஒரு மலை முகட்டில் இளைப்பாறியபடி ரம்மியமான சுற்றுப்புறச் சூழலை ரசித்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்கள் கண்களுக்கு நீங்கள் கடந்து வந்த பாதை தெரிகிறது.

 

நீங்கள் இந்த இடத்தை அடைவதற்காகப் பட்ட கஷ்ட்டங்களின் சுவடுகள் அங்கே தெரிகின்றன. அதோ, தூரத்தில் தெரியும் அந்த மரம்! உங்களை மேலே ஏற்றுவதற்காக, தனது சக்தியெல்லாம் அர்ப்பணித்துவிட்டு, வலுவிழந்து, வளைந்துள்ளதை நீங்கள் கண்டுகொள்கிறீர்கள்.

எத்தனைப் பெரிய தியாகம் அது! இருந்தும், பொதுவாக எங்களின் வெற்றிக்கு நாங்களே காரணம் என்றுதான் நாங்கள் அதிகமான நேரங்களில் நினைக்கிறோம். ஆனால் நாங்கள் வாழும் சமூகத்தின் ஏனையவரின் பங்களிப்பும் அதிலுள்ளதென்பதை பலர் அறிந்திருப்பதில்லை.

எங்கள் வெற்றிக்கு வழி நின்றோரை நினைவுகூறுவதற்கு நாங்கள் நேரம் ஒதுக்குகிறோமா? குறைந்தது அவர்களின் முகம் எங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறதா? அவர்கள் இப்போதும் எங்கள் பக்கத்திலிருந்து கொண்டே எங்களின் உயர்வுக்காய் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு இருக்கலாம்.

அல்லது அவர்கள் தங்கள் கடைமையை நிறைவு செய்துவிட்டும், எமக்கு பாதுகாப்பானச் சூழலை உருவாக்கி தந்துவிட்டும், கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச் சென்றிருக்கலாம்.

“பிறருக்கு உதவுதல்” உலகத்தார் போற்றும் மிகப்பெரும் மனிதப்பண்பாகும். இந்த உன்னதபண்புக்குச் சொந்தகாரர்களாக பெற்றோர்களைத் தவிர வேறு யாராக இருந்துவிட முடியும்?

இத்தகைய உன்னத பண்பின் உதாரண புருஷர்களாக விளங்கிய பெற்றோரைப் பற்றிய கதையினை நாங்கள் அண்மையில் அறிந்துகொண்டோம்.

இவர்கள் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். சமூகத்தின் அத்தனை அநீதிகளையும் தாங்கிக்கொண்டு தமது பிள்ளைக்காக தம்மை அர்ப்பணித்து கொண்ட தாயும் தந்தையும் இன்று அகமகழ்ச்சியில் பூரித்து நிற்கிறார்கள்.

இதற்கு காரணம், அவர்களது மகன் சர்வதேச நிறுவனமொன்றில் பொறியியலாளராக பணிபுரிவதே ஆகும்.

இது அவர்கள் பற்றிய கதை. தினக்கூலிகளாக இருந்துகொண்டு தமது பிள்ளையின் வருங்காலத்திற்காக பசி, பட்டினியை பொறுத்துகொண்டார்கள்.

தூக்கத்தை துறந்தார்கள். தாம் படும் கஷ்ட்டங்களை ஒரு போதும் தமது பிள்ளை பட்டுவிடக்கூடாது என்ற வைராக்கியத்தோடு உழைத்தார்கள்.

அதனை பொறுப்பாகவும் செய்தார்கள். தம்மால் தமது பிள்ளைக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய செல்வம் நற்பண்புகளும், உயர்ந்த கல்வியும் என்பதை உணர்ந்துகொண்ட அவர்கள், எதிர்காலத்தில் தமது பிள்ளை வாழப்போகும் நல்வாழ்வினை மனதில் கொண்டு தம்மை முழுதாய் அர்ப்பணித்துகொண்டவர்கள்.

நாளுக்கு நாள் தமது பிள்ளை கல்வியில் காணும் முன்னேற்றத்தைக் கண்டு அவர்கள் ஊக்கமடைந்தார்கள்.

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று சித்தியடைந்த போது, அவர்கள் தமது பிள்ளையின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கை கொண்டார்கள்.

முன்னரை விட அதிகமான கூலி வேலைகளை தேடிக்கொண்டார்கள், தினம் தினம் தமது மகன் கல்வியில் அடையும் உயர்ச்சியை கண்டு இரவையும் பகலையும் மறந்து பாடுபட்டார்கள். உடல் நலிந்தது. ஆனால் மனம் வலிந்தது.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களிலும் விசேட சித்திபெற்று தன் திறமையை, இன்னுமொருமுறை பறைசாற்றினான் அவர்களது மகன்.

சிறுபராயம் முதல் தமது மகனின் மனதில் அலைபாய்ந்து கொண்டிருந்த பொறியியலாளர் கனவை அறிந்திருந்த பெற்றோர், வறுமை காரணமாக அந்த கனவு பொய்த்து போய்விடுமோ என்று பயந்தபோதிலும், தனது மகனை ஊக்கப்படுத்துவதில் பின்வாங்கவில்லை.

அவர்களது மகன், உயர் தரத்தில் கணிதப்பிரிவில் சிறப்பு தேர்ச்சி பெற்று மாவட்டத்தின் முதல் மாணவராக தெரிவு செய்யப்பட்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்.

இவ்வாறான சவால்களுக்கு மத்தியில்தான், தனது கல்வியினை மேலும் தங்கு தடையின்றி தொடர்வதற்கு “டயலொக் புலமைப்பரிசில்” வாய்ப்பு அவருக்கு கிடைக்கப்பெற்றது. இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது இவருக்கு மட்டுமல்லாது இவரை போன்ற பல மாணவர்களுக்கு பல்வேறு விதத்திலும் உறுதுணையாக இருந்துள்ளது.

இம்மாணவன், பல்கலைக்கழகத்திலும் தனது திறமையை வெளிப்படுத்திய மிகச் சிறந்த மாணவனாக இருந்ததோடு, பாடவிதானங்களிலும், செய்முறைகளிலும் தன் திறனை நன்றாக வெளிப்படுத்தி சிறப்பு பட்டத்தைப் பெற்று, சர்வதேச நிறுவனமொன்றில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பினையும் பெற்றுகொண்டார்.

ஒரு சிறிய கிராமத்தில் வறியவர்களாக பிறந்து கால்வயிற்று உணவு உண்டு, தமது மகனை கட்டிகாத்து, இன்று அவர் ஒரு சர்வதேச நிறுவனத்தில் பொறியியலாளராக பணிபுரியும் அளவிற்கு ஆளாக்கி, அவரின் எதிர்கால பயணத்திற்கும், அவர் எதிர்பார்த்த வாழ்வை அடைவதற்கும், தேவையான அனைத்து வழிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, இன்று தம் மகனுக்கு ஆசீ வழங்கும் வாழ்த்துடை பெற்றோராக இவர்கள் மாறியிருக்கின்றார்கள்.

இது, இவர்களின் கதை மட்டுமல்ல. உலகெங்கும் வாழும் அனைத்து பெற்றோர்களினதும் கதையாகும்.

இது போன்ற இன்னோரன்ன இன்னல்களுக்கு முகம்கொடுத்து, தமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காய் தம்மை தியாகம் செய்யும் அனைத்து பெற்றோர்களுக்கும், எமது மதிப்புக்குரிய வணக்கத்தையும், கௌரவத்தையும் இவ்விதமாக தெரிவித்துகொள்கிறோம்.

Hot Topics

Related Articles