அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு டெப் கருவி இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக பதிவு செய்வதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி முழுமையாக உண்மைக்குப் புறம்பானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறு டெப் கருவியை வழங்குவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏமாற்றும் வகையில் சமூக ஊடகங்களில் இவ்வாறான செய்தி வெளியிடப்படுகின்றது. எனவே கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவித்தல்களை மாத்திரம் ஏற்றுக்கொள்ளுமாறு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் மாணவர்களின் கற்பித்தல் செயல்முறைக்கு வசதியாக டிஜிட்டல் கற்றலுக்கு உதவும் வகையில் டெப் கருவிகளை வழங்க கல்வி அமைச்சு முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இதற்கமைய நாட்டின் வறுமை நிலையில் உள்ள மற்றும் கிராமப்புற பாடசாலைகளில் 6 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் கருவிகளை வழங்கும் முதல் கட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் அளவுகோல்களின் அடிப்படையில் 184 தேசிய பாடசாலைகள், 1218 மாகாண பாடசாலைகள் உள்ளடங்கலாக 1401பாடசாலைகளுக்கு டெப் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய முதல் கட்டத்தில் 83,086 மாணவர்களுக்கும் 9,941 ஆசிரியர்களுக்கும் மட்டுமே டெப் கருவிகள் வழங்கப்பட உள்ளது.
அதேநேரம் டெப் கருவியை வழங்குவது தொடர்பில் எதிர்காலத்தில் அறியத்தருவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.