அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இன்று கைப்பற்றியது.
குறித்த தொடரில் முதல் முறையாக களம் இரங்கி பலரின் பாரட்டையும் வென்றவர் நடராஜன். இறுதிப் போட்டியில் நடராஜன் ஷர்துல் தலா ஒரு விக்கெட்டையும், சுந்தர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடரின் நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கியுள்ளார்.
இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலியும், டி20 தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதன் பிறகு தொடர் குறித்து ஊடகங்களுக்கு உறையாற்றிய முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்தி, நடராஜனை அழைத்து அவருடன் தமிழில் பேசினார்.
அப்போது அவர், “ஆஸ்திரேலியா வந்து இங்கு மிகப்பெரிய அணியுடன் ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றி பெறுவது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தனது முதலாவது பயணத்தின் எதிர்பார்ப்பு குறித்து நடராஜனிடம் கேட்டபோது, “நான் எதுவும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். நான் நெட் பவுலராகவே வந்தேன். என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஐ.பி.எல் தொடரில் நல்ல பார்மில் இருந்தேன். அது எனக்கு உதவியாக இருந்தது. சக வீரர்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்தனர். என்னை எல்லோரும் ஊக்குவித்தனர். அது எனக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.என்று கூறியுள்ளார் நடராஜன்.
இந்த் போட்டியில் தோனி சாதனையை கோலி முறியடிக்க தவறினாலும் வேறெந்த இந்திய கேப்டனும் சாதிக்காத ஒருவிஷயத்தை சாதித்திருக்கிறார்.
அவுஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் என மூன்று போட்டிகளிலும் தொடரை வென்ற ஒரே இந்திய அணித்தலைவர் கோலிதான். சர்வதேச அளவில் இதை இரண்டு அணி தலைவர்களே இதுவரை சாதித்திருக்கிறார்கள். ஒருவர் டு பிளசிஸ், இன்னொருவர் விராட் கோலி.