உலகம்

மூன்றாவது நாளாகவும் அதிக தொற்றாளர்கள் : PHI உத்தியோகத்தர்களுடன் பாதுகாப்புப்படையினர் களத்தில்

இலங்கையில் இன்று மேலும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மூன்றாவது நாளாக பதிவான மிக கூடிய தொற்று எண்ணிக்கை இதுவாகும்.


இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 230 பேர் சிறைச்சாலைகளுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக 7,978 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 29,378 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 454 பேர் குணமடைந்ததையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 20,804 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் இதுவரை 142 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், 491 பேர் கொரோனா சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 நாட்களேயான குழந்தை கொரோனாவால் பலி!

இன்று பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை கொரோனாவால் உயிரிழந்திருந்தமை சேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

முகத்துவாரம் பகுதியை சேர்ந்த குறித்த குழந்தை இன்று (08) அதிகாலை 4 மணியளவில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

காலி மாவட்டத்தின் பாடசாலைகளுக்கு தொடரும் பூட்டு!

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையை அடுத்து திங்கள் முதல் அமுலாகும் வகையில் 3 தினங்களுக்குகாலி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் காலி மாவட்டத்தின் கொரோனா நிலைமையை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்களின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு படையினர் களத்தில்!

அட்டுலுகம பகுதியில் அண்மையில் பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள சென்ற பொது சுகாதார பரிசோதகர் மீது ஒருவர் எச்சில் உமிழ்ந்த காரணத்தால் குறித்த நடவடிக்கை பாதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மீண்டும் பி.சீ.ஆர் பரிசோதனை பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதும் அந்த பகுதி மக்கள் உரிய வகையில் ஒத்துழைப்புக்களை வழங்குவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய நாளை முதல் பொது சுகாதார பரிசோதகர்கள் தமது கடமைகளை முன்னெடுக்கும் போது அவர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் இராணுவத்தினரும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles