உலகம்

மர்ம நோயால் ஆந்திராவில் பதற்றம் ; ஒருவர் மரணம், 300 பேர் வைத்தியசாலையில்!

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு நகரத்தில், அடையாளம் காணப்படாத மர்ம நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை ஏறத்தாழ 300 பேர் குறித்த நேயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நேற்று காலை நிலவரப்படி, கிட்டத்தட்ட 200 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மர்ம நோய்க்கான அறிகுறிகளுடன் கடந்த சனிக்கிழமை 45 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 46 சிறுவர்களும் 70 பெண்களும் அடங்குவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த நோய் குடிநீர் அல்லது உணவு மாசு காரணம் அல்ல என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மர்ம நோயிக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதேவேளை, தேசிய வேதியியல் தொழில்நுட்ப மையத்தின் குழு ஒன்றும் இன்று ஏலூரு சென்று ஆய்வுகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு குமட்டல், வலிப்பு, நினைவிழப்பு போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏலூரு அரசு வைத்தியசாலையில் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆந்திராவில் இந்த மர்ம நோய் ஏற்பட்டிருப்பது ஏலூரு பகுதி மக்களை மற்றுமின்றி அனைவரையும் பதற வைத்துள்ளது.

Hot Topics

Related Articles