உலகம்

கொரோனாவால் இலங்கையில் மேலும் இருவர் மரணம்! தொற்றாளர்களை பதிவு செய்வதற்காக புதிய செயலி அறிமுகம்

இலங்கையில் இன்று மேலும் 703 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் கொரோனா நோயளர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிரந்தர வதிவிடம் அறியப்படாத கொழும்பில் வசித்து வந்த 62 வயது ஆண் ஒருவரும், கொழும்பு 13 ஜம்பட்டா வீதியை சேர்ந்த 77 வயது ஆண் ஒருவரும் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 142 ஆகவும், கொரோனா தொற்றாளர்களின் மொத்தம் எண்ணிக்கை 28,580 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் 154 பேர் சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதில், ஏனைய சிறைச்சாலைகளில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக வீரவில சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட 74 கைதிகளுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நாட்டில் இன்று 344 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,804 ஆக பதிவாகியுள்ளது.
இந் நிலையில் 7 ஆயிரத்து 634 பேர் கொரோனாவுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் பதிவான புதிய தொற்றாளர்கள்

நாவலப்பிட்டி – கெட்டபுலா மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இவர் கொழும்பு, கிருலப்பனை பகுதியில் பணிப்புரிந்த குறித்த யுவதி கடந்த 25 ஆம் திகதி தனது வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புதிதாக 5 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதை அடுத்து அவிசாவளை – சீதாவாக்கை ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தில் பதிவாகியுள்ள தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாக அவிசாவளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த 20 அதிகாரிகளுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரால் சரத் வீரசேகர நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையங்களுக்கு பூட்டு!

கிரிபத்கொடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வேவல்கொட வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால் ஹுனுப்பிட்டி ரயில் நிலையத்தில் இன்று முதல் புகையிரதம் நிறுத்தப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுதவிர, மருதானை, தெமட்டகொடை, களனி மற்றும் பேஸ்லைன் வீதி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் புகையிரதம் நிறுத்தப்படமாட்டாது என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களை பதிவு செய்வதற்காக புதிய செயலி அறிமுகம்

தொற்று ஏற்பட்டவர்களை அடையாளங்காணப்பதற்காக மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனை மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்காக உட்படுத்தப்படுபவர்களை பதிவு செய்வதற்காக புதிய கையடக்க தொலை செயலி ஒன்றை அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதர சேவைகள் பணிப்பாளர், மருத்துவ நிபுணர் சமன்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தரவுகளை சிறந்த முறையில் சேகரிப்பதற்காக இந்த செயலி உதவக்கூடும் எனவும் இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை ஆய்வு கூட கட்டமைப்பு, தொற்று நோய் விஞ்ஞான பிரிவு, சுகாதார அமைச்சு மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள தொற்று நோய் விசேட நிபுணர்கள் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி சுகாதர சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Hot Topics

Related Articles