உலகம்

இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்கள்! 11வது நாளாக நீடிக்கும் போராட்டம் : சொல்வது என்ன?

இந்தியாவில் வேளாண்துறையில் மூன்று புதிய சட்டத் திருத்தங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது.

இப் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை என்றும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானவை என்றும் எதிர்க்கட்சிகளும் விவசாய சங்கங்களும் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன் 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ள நிலையில், 3 சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி டில்லியில் 11 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சட்டங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. புதிய சட்டங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் முன்வைக்கும் பாதகமான அம்சங்கள் என்ன? என்பதை பார்ப்போம்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம்:

கொள்ளை லாபத்துக்கு ஆசைப்பட்டு வியாபாரிகளில் சிலர் செய்துவரும் பதுக்கல் மற்றும் ஏற்றுமதியைக் கட்டுப்பட்டுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டதே ‘அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்’
ஆனால், தற்போது மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புதிய ‘அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020’, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்தே நீக்கியிருக்கிறது. எனவே, மேற்கண்ட பொருள்களை இருப்பு வைத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என்கிறது புதிய சட்டம்.

அதேசமயம், தோட்டப் பயிர்களின் விலை கடந்த ஒரு வருடத்தில் விற்கப்பட்ட சராசரி விலையைவிடவும் 100 சதவிகிதம் அதிகமாக விற்கப்பட்டாலோ அல்லது தானியங்களின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்கப்பட்ட சராசரி விலையிலிருந்து 50 சதவிகிதம் அதிகமாக விற்கப்பட்டாலோ அரசு கட்டுப்பாடு விதிக்கும் சூழல் ஏற்படும் என்கிறது. ஆனாலும், உணவுப் பொருள்களை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது என்கிறது புதிய சட்டத்திருத்தம்.

இனி பெரு நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருள்களை அளவுக்கதிகமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளும். இதன் தொடர்ச்சியாக சந்தையில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். பின்னர், தங்களிடமுள்ள பதுக்கல் பொருளை அதிக விலைக்கு சந்தையில் விற்று, கொள்ளை லாபம் சம்பாதிக்கும்.

ஆக, பெரு நிறுவனங்கள் இதுவரை பயந்து பயந்து செய்துவந்த பதுக்கல் மற்றும் மறைமுக ஏற்றுமதி மோசடிகளை, வெளிப்படையாகச் செய்வதற்கு இந்தப் புதிய சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது என்பதுதான் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் குற்றச்சாட்டு.

வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020

இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மாநிலம் தாண்டி இந்தியா முழுக்க எந்த வியாபாரியிடமும் விற்றுக்கொள்ளலாம்.

இதனால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை, கூடுதல் லாபம் கொடுக்கும் வியாபாரியிடம் விற்று, லாபம் பார்க்க வழிவகை ஏற்படும் என்கிறது அரசுத் தரப்பு.

ஆனால் சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை வெளி மாவட்டத்துக்கோ அல்லது மாநிலங்களுக்கோ எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். இந்தச் சூழலில், குறிப்பிட்ட மாநிலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகும் விளைபொருள்களைப் பெரு நிறுவனங்களும், பன்னாட்டுக் கம்பெனிகளும் அறிந்துகொண்டு, விவசாயிகளிடமிருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்வதற்கே இந்தப் புதிய சட்டம் வழிவகுக்கும்.

எனவே, இது விவசாயிகளுக்கு ஆதரவான சட்டம் அல்ல… பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்:

இந்தச் சட்டம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழலைக் கருத்தில்கொண்டு, விலையை உறுதிப்படுத்தி, விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது, தங்கள் விளைநிலத்தில் விளைவிக்கப்போகும் உற்பத்திப்பொருள் குறித்து பெரு நிறுவனங்களுடன் விவசாயிகள் முதலிலேயே ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்.

பின்னர், விளைவித்த பொருளை ஏற்கெனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் விலைக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமே விற்றுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் சாராம்சம்.

`இதன் மூலம், தான் விளைவிக்கப்போகும் விளைபொருளுக்கான விலையை விவசாயி முன்கூட்டியே தீர்மானித்து, ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்துகொண்டு, எந்தவித மன உளைச்சலுமின்றி விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்’ என்கிறது அரசுத் தரப்பு.

முன்கூட்டியே ஒப்பந்தத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்துகொள்வதால், விலை வீழ்ச்சி எனும் அபாயத்திலிருந்து விவசாயி பாதுகாக்கப்படுகிறார்.

விளைபொருளுக்கான விலை உத்தரவாதம் விவசாயிக்குக் கிடைத்து விடுகிறது என்கிறது இந்தச் சட்டம். மேலும், ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னைகள் ஏற்பட்டால், சட்டரீதியான தீர்வுகள் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டிருப்பதாகச் சட்டம் சொல்கிறது.

ஆனால், இந்த ஒப்பந்தச் சட்டம், பணம் படைத்தவர்கள் தங்கள் பண்ணை நிர்வாகத்தை அதிகாரப்பூர்வமாக செய்துகொள்ளவே வழிவகுக்கும் என்பதே எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதம்.

‘பெரு நிறுவனங்கள் விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, கான்ட்ராக்ட் முறையில் விளைபொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை வசதிகளை அதிகாரபூர்வமாக இந்தச் சட்டம் செய்துதருகிறது.

இதன் மூலம் சொந்த நிலத்திலேயே விவசாயிகள் கூலிகளாக்கப்படுவார்கள். தனியார் பெரு நிறுவனங்கள், விவசாயிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்க்க இயலாது. இதன் தொடர்ச்சியாக விவசாயி தன் விளைபொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயிப்பதும் கேள்விக்குறியாகிவிடும் சூழலே தொடரும்’ என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

நன்றி
மாலைமலர்

Hot Topics

Related Articles