உலகம்

இலங்கையில் பல மாவட்டங்களை அச்சுறுத்தும் கொரோனா! இன்று மூவர் பலி : பாடசாலைகளுக்கு பூட்டு

இலங்கையில் பல பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் நாளையதினம் பல மாவட்டங்களில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைள் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் 649 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டள்ளனர், இவர்களில் 197 பேர் சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 27,877 ஆக பதிவாகியுள்ளதுடன் 7,280 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை மையங்களில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அத்துடன் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 370 பேர் குணமடைந்ததையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 20,460 ஆக பதிவாகியுள்ளது. உயிரிழப்புகள் 137 ஆக பதிவாகியுள்ளன.

எனினும் சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்கின்றது.

நேற்றைய இனங்கானப்பட்ட 669 தொற்றாளர்களில் கொழும்பு 204, கண்டி 170 கம்பஹா 111 களுத்துறை 67, அம்பாறை மற்றும் காலி 21 என்ற எண்ணிக்கையில் பதிவாகியிருந்தனர்.

இதில் கண்டி, போகும்பர சிறைச்சாலையில் 147 கைதிகளுக்கும் கம்பஹா, மஹர சிறைச் சாலையில் 36 கைதிகளுக்கும் தொற்று உறுதியாகியிருந்தது.

இதற்கமைய சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2,051 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன 98 ,80, 71 ஆகிய வயதுகளையுடைய ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் இருவர் நேற்றையதினமும் இன்று ஒருவரும் வைத்தியசாலைகளில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 140 ஆக உயர்வடைந்துள்ளது.

ஹட்டன்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் சேவையாற்றும்; ஆசிரியை ஒருவருக்கும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தினை நாளை முதல் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் உள்ள பொகவந்தலாவை ஆரியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த ஆசிரியை கடந்த 28ம் திகதி மற்றும் 30ம் திகதியும் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் சுமார் 1500 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 76 ஆசிரியர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

இதனால் அந்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட 72 ஆசிரியர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய 100 மாணவர்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கண்டி – பன்விலை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பன்விலைவத்த கிராமத்தில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன் அவருடன் தொடர்பினை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நுவரெலியா

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் அட்டன், வெளிஓயா தோட்டத்தில் தண்டுகள பிரிவு, பொகவந்தலாவ பொகவன பகுதியில் குயினா தோட்டம், கினிகத்தேனை பிளக்ஹோட்டர் தோட்டம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மறுஅறிவித்தல் வரை இந்த பகுதிளுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறைகள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் 2ஆவது அலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 208 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.


யாழ்ப்பாணம்

இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தி; மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் தா.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு விடுமுறை

காலி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

இதேவேலை, வடமாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் வடக்கில் தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக நாளை விடுமுறை விடுக்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

அக்கறைப்பற்று பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் நாளை (07) திறக்கப்படவுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles