இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் லங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டியின் ஊடாக, இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு அதுவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற வலது கை பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் என்ற இளைஞனே, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் ஊடாக தனது கிரிக்கெட் பிரவேசத்தை பெற்றார்.
இந்த போட்டியில் களமிறங்கிய விஜயகாந்த் வியாஸ்காந்த், 4 ஓவர்களை வீசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
4 ஓவர்களில் 29 ஓட்டங்களை கொடுத்து, ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.
கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸின் விக்கெட்டை கைப்பற்றியதன் ஊடாக, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதலாவது விக்கெட்டை தனதாக்கிக் கொண்டார் விவி என அழைக்கப்படும் விஜயகாந்த் வியாஸ்காந்த்.
அத்துடன், விஜயகாந்த் வியாஸ்காந்த், துடுப்பாட்டத்தில் 4 பந்துகளுக்கு 3 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதிருந்தமையும் விசேட அம்சமாகும்.
முதலாவது போட்டியிலேயே தனது திறமையை வெளிப்படுத்திய விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு தனது வாழ்த்துக்களை அஞ்சலோ மெத்தியூஸ் வெளியிட்டார்.
விஜயகாந்த் வியாஸ்காந்த், சிறந்ததொரு பந்து வீச்சாளர் எனவும் அவர் கூறியிருந்தார்.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரனுக்கு பின்னர், சுழற்பந்து வீசும் வகையில் அணிக்குள் உள்வாங்கப்பட்ட தமிழராக விஜயகாந்த் வியாஸ்காந்த் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இன்றையதினம் பிறந்தநாளைக் கொண்டாடும் வியாஸ்காந்திற்கு எமது வாழ்த்துக்கள்.