உலகம்

டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு கனடாவில் ஆதரவு பேரணி!

டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார்கள் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டில்லியில் போராட்டம் நடத்தும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் நூற்றுக்கணக்கான கார்களில் கோரிக்கை பதாகைகள் மற்றும் கனடா கொடிகளை ஏந்தியபடி பேரணியாக சென்றுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லோயர் மெயின்லேண்டின் சர்ரே பகுதியில் இருந்து வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகம் வரை இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.

கனடாவில் உள்ள இந்தோ-கனடிய சமூகத்தில் பலர் இந்தியாவின் பஞ்சாப் பிராந்தியத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்களில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பலர், இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் ஆழமான உறவுகளையும் தொடர்புகளையும் கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாக தமது உறவுகளுக்கு ஆதரவாக பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில நெடுஞ்சாலைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்திய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.

இதனையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles