உலகம்

‘விழித்திருக்கும் கபால திறப்பு’ அறுவை சிகிச்சை செய்து அரச வைத்தியர்கள் சாதனை!

இலங்கையின் அரச வைத்தியசாலையில் முதல் முறையாக விழித்திருக்கும் கபால திறப்பு (Awake Craniotomy) அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (01) அனுராதபுர போதனா வைத்தியசாலையில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையால் இவ் “விழித்திருக்கும் கபால திறப்பு’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது இலங்கையில் ஒரு அரச மருத்துவமனையில் நடத்தப்படும் முதல் அறுவை சிகிச்சை என்று அனுராதபுரா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளையின் இன்சுலர் கட்டியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு இவ் அறுவை சிகிச்சையை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் பக்கவிளைவுகள் அல்லது நரம்பியல் குறைபாடுகள் இல்லாமல் நோயாளி குணமடைந்துவருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டமையானது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.

“கபால திறப்பு” (Craniotomy) அறுவை சிகிச்சை என்பது மூளை நரம்பியல் மருத்துவத்தில் செய்யப்படும் ஓர் அறுவை சிகிச்சை முறையாகும். மனித மண்டை ஓட்டில் (கபாலம்) உள்ள சிறு பகுதி எலும்பினை அகற்றி; ஒரு திறப்பினை ஏற்படுத்தி அதன் வழியாக மூளையின் பகுதிகளில் மூளைக் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

‘விழித்திருக்கும் கபால திறப்பு’ (Awake Craniotomy) அறுவை சிகிச்சையின் பொழுது அறுவை சிகிச்சை செய்யப்படும் நபர் அறுவை சிகிச்சை நடைபெறும் பொழுது குறிப்பிட்ட சில நிலை வரையிலும் கண்களை விழித்துக்கொண்டு, சுயநினைவுடன் இருப்பார்.

மனிதனின் மிக முக்கியமான இயக்கங்களான கை, கால் இயக்கம் பேச்சு மற்றும் பார்வை போன்றவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகளை ஒட்டி அல்லது அந்த பகுதிகளில் அறுவைசிகிச்சை வேண்டிய தேவை ஏற்படும்பொழுது ‘விழித்திருக்கும் கபால திறப்பு, முறையானது அதிக பலனை தரும். இதன் மூலம் நோயாளிக்கு ஏற்படும் மூளை பாதிப்பைகளை தவிர்க்க முடியும்.

Hot Topics

Related Articles