உலகம்

கொரோனாவுக்கு எதிராக இலங்கையில் உருவாகும் மருந்து

கொவிட் வைரஸை முற்றாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் உள்நாட்டு ஆயுர்வேத மருந்தொன்றை பரிசோதனை செய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வத்துபிட்டிவல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் விசேட வைத்திய குழுவொன்று இந்த பரிசோதனைகளை நடத்தியுள்ளது.

குறித்த மருந்து தொடர்பில் மேற்குலக நாடுகளில் நடத்தப்படும் பரிசோதனைகளின் பிரகாரம், நடத்தப்பட்ட 2 பரிசோதனைகளும் வெற்றியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை பகுதியைச் சேர்ந்த உள்நாட்டு ஆயுர்வேத வைத்தியர் ஒருவரினால் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வத்துபிட்டிவல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில், சுயேட்சையாக முன்வந்த 140 பேருக்கு இந்த மருந்தை பயன்படுத்தி முதற்கட்டமாக பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு 6 நாட்களை கடந்த நோயாளர்களுக்கு, நாளொன்றில் 2 தடவை வீதம் மூன்று நாட்கள் இந்த மருந்தை வழங்கியுள்ளனர்.

இதன்படி, இந்த மருந்தை உட்கொண்ட நோயாளர்களில் தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடலில் கொவிட் தொற்று குணமடைந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக கம்பஹா போதனா வைத்தியசாலையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட பரிசோதனைகளுக்காக சுயேட்சையாக முன்வந்த 50 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 50 பேரில் 25 பேருக்கு புதிய ஆயுர்வேத மருந்தும், ஏனையோருக்கு வழமையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாவது பரிசோதனைக்காக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, 3 அல்லது 4 நாட்கள் கடந்த நோயாளர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 3 நாட்கள் தொடர்ச்சியாக மருந்து வழங்கப்பட்டது.

50 பேரில் 31 பேருக்கு 3 நாட்களின் பின்னர் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

புதிய மருந்தை உட்கொண்ட 16 பேரும் கொவிட் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளதுடன், வழமையான சிகிச்சைகளை பெற்ற 15 பேரின் உடலில் கொவிட் தொற்று தொடர்ந்தும் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, மூன்றாம் கட்ட பரிசோதனைகள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடத்தப்படவுள்ளதாக ஓளடத உற்பத்தி, விநியோகம், தரப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.

நன்றி – www.trueceylon.lk

Hot Topics

Related Articles