உலகம்

பிச்சை எடுத்து படித்து வழக்கறிஞரான திருநங்கை

பாகிஸ்தானில் திருநங்கை பிச்சை எடுத்து படித்து வழக்கறிஞராகியுள்ளார்.

அவர் தான் அந்நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞர் ஆவார்.


பஸ் நிலையம் மற்றும் ரெயில்களில் திருநங்கைகள் பலர் உதவி கேட்டு கையேந்துவது உண்டு. அவர்களுக்கு பலர் உதவினாலும் சிலர் கேலி செய்வதும் நடந்துதான் வருகிறது.

ஆனால் விடா முயற்சியால் திருநங்கைகள் பலரும் வாழ்க்கையில் உச்சத்தை தொட்டு வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டில் திருநங்கை பிச்சை எடுத்து படித்து வழக்கறிஞராகியுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞரும் அவரே ஆவார்.

திருநங்கையினரை மூன்றாம் பாலினத்தவர்கள் என அங்கீகரித்து தேசிய அடையாள அட்டையில் அவர்களது பெயர் இடம்பெற 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

திருநங்கையினரை சம உரிமைபெற்ற பொதுமக்களாக 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு அங்கீகரித்தது. இதையடுத்து, பல திருநங்கைகள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், நிஷா ராவ் (28) என்ற திருநங்கை பாகிஸ்தான் நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞராகி பெருமை சேர்த்துள்ளார். லாகூரை சேர்ந்த திருநங்கை நிஷா ராவ் தனது வீட்டில் இருந்து 18 வயதில் வெளியேறினார்.


வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சட்டக்கல்லூரியில் இணைந்தார். கல்வி கட்டணம் மற்றும் வாழ்க்கையை நடத்த பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என சக திருநங்கைகள் நிஷாவை கட்டாயப்படுத்தினர்.

ஆனால், சக திருநங்கைகளின் கட்டாயப்படுத்தலை நிராகரித்த நிஷா ராவ் லாகூர் சாலைகளில் பிச்சை எடுத்து தனது வழக்கறிஞர் படிப்பை மேற்கொண்டார்.

தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை லாகூர் சாலைகளில் உள்ள சிக்னல்களில் பிச்சை எடுத்து மதியம் 2 மணிக்கு நடைபெறும் சட்டக்கல்லூரி வகுப்புகளில் நிஷா பங்கேற்று கல்வி பயின்றார். பிச்சை எடுத்த பணத்தை கல்வி கட்டணமாக செலுத்தினார்.

சட்டகல்லூரி தேர்வில் வெற்றிபெற்ற நிஷா ராவ் வழக்கறிஞராக பணி செய்வதற்கான உரிமத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் பெற்றார். தற்பொது கராச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் பார் கவுன்சிலில் நிஷா ராவ் இணைந்துள்ளார்.

இதன் மூலம் பாகிஸ்தான் நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையை நிஷா ராவ் பெற்றுள்ளார்.

திருநங்கைகளின் உரிமைகளை பெற சட்டரீதியில் முயற்சிகளை மேற்கொள்வேன் என வழக்கறிஞர் நிஷா ராவ் தெரிவித்துள்ளார். நிஷா ராவ் தற்போது 50-க்கும் அதிகமான வழக்குகளில் வழக்கறிஞராக வாதிட்டு வருகிறார்.

Hot Topics

Related Articles