உலகம்

முதலாவது எல்.பி.எல். திரில் போட்டியில் வெற்றியீட்டிய அணி எது ?

லங்கா பிரிமியர் லீக் தொடரின் திரில்லான முதல் போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியீட்டியது.
லங்கா பிரிமீயர் லீக் தொடர் நேற்றையதினம் மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது.


இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயமான லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரானது பல தடைகள், பல சவால்களுக்கு மத்தியில் நேற்றையதினம் கோலாகலமாக ஆரம்பமானது.

கொழும்பு கிங்ஸ், தம்புள்ள வைக்கிங், கோல் கிளாடியேட்டர்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்கு பற்றும் இத் தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன.

 

அதன்படி 15 நாட்கள் நடைபெறும் இத் தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


நேற்று இரவு 8 மணிக்கு இடம்பெற்ற முதல் போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும், குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணியும் ஒன்றுடன் ஒன்று மோதின.

இத் தொடரில் ஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் 8 ஆட்டங்களில் போட்டியிடும். அதில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நடைபெறும். அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும். இறுதிப் போட்டியானது டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெறும்.


இத்தொடரில் வீரர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மிக உயர்ந்த சுகாதார கண்காணிப்பின் கீழ் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 220 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.

லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் இரண்டு அணிகளும் சமமான ஓட்டங்களை பெற்ற நிலையில், மேலதிக ஒரு ஓவர் (சுப்பர் ஓவர்) இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டன.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 17 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி, 12 ஓட்டங்களை மாத்திரமே பெற்று முதல் போட்டியில் தோல்வியை தழுவியது.

இப் போட்டியில் வெற்றி பெற்ற கொழும்பு கிஙஸ் 2 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முலிடத்திலுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக கொழும்பு கிங்ஸின் டினேஸ் சந்திமல் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்றைய 2 ஆவது போட்டியில் காலி க்ளடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டலியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Hot Topics

Related Articles