உலகம்

இலங்கையில் பிச்சை எடுத்தாலும் பிச்சை கொடுத்தாலும் தண்டனை !

இலங்கையின் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காணப்படும் வீதி சமிஞ்சைகளுக்கு அருகில் யாசகம் பெறுபவர்கள் மற்றும் அந்த யாசகர்களுக்கு வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்து பணம் அல்லது பொருட்களை கொடுக்கும் நபர்களுக்கு எதிராக மோட்டார் வாகன சட்டம் மற்றும் வீதி ஒழுங்குவிதிகள் சட்டத்திற்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காணப்படும் வீதி சமிஞ்சைகளுக்கு அருகில் யாசகம் பெற்றுவரும் நபர்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய இவர்கள் உண்மையில் யாசகர்கள் இல்லை என்றும் , போலியான முறையிலே இவர்கள் யாசகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இவர்கள் யாசகம் பெறுவதை வியாபாரமாகவே செய்து வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

இத்தகைய நபர்களால் வாகன போக்குவரத்து செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இது போன்ற போலி யாசகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை, வீதி சமிஞ்சைகளுக்கு அருகில் இவ்வாறு யாசகம் பெறும் நபர்களுக்கு பொருட்கள் அல்லது பணத்தை வழங்குவதாக குறிப்பிட்டு ,வாகன போக்குவரத்து நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்திவைத்துக் கொண்டு செயற்படும் நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகன போக்குவரத்து வரத்து செயற்பாடுகளுக்கு இடையூறு செய்வதும் ஒரு குற்றச்செயற்பாடாகவே கருதப்படும். அதனால் அத்தகைய செயற்பாடுகளில் ஈடுப்படுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து பொலிஸ் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன். இதன்போது கைது செய்யப்படும் நபர்களுக்கு எதிராக வீதி ஒழுங்கு சட்டவிதிகள் மற்றும் மோட்டார் வாகன சட்டவிதிகளுக்கமையவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Hot Topics

Related Articles