ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று சர்வதேச நீரிழிவு தினம் ( World Diabetes Day) கடைபிடிக்கப்படுகிறது.
உலகளவில் 460 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தெற்காசிய நாடுகளில் வாழும் மக்கள் தான் அதிகளவிலான நீரிழிவு நோயாளிகளாக இருக்கிறார்கள்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த தருணத்தில் உலக நீரிழிவு தினத்தில், அவர்களை பாதுகாத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தாதியர்களும் பாரிய அளவில் பங்குபற்றவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
நீரிழிவு நோய் என்பது நோயா ? அல்லது குறைபாடா? என்ற சர்ச்சை இன்றும் நீடிக்கிறது.
ஆனால், நீரிழிவு நோயை வருமுன் காப்பதும், வந்த பின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக கொள்ளவேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் பிரதான அறிவுறுத்தலாக இருக்கிறது.
இரத்த சர்க்கரையின் அளவை நிர்ணயிப்பதில் உலக சுகாதார நிறுவனம் வணிக நோக்கில் இயங்குவதாக சில தன்னார்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதன் பக்க விளைவுகள் அதிகம் என்பதுடன் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், உலக சுகாதார நிறுவனம் இந்த நோயின் பல கோணங்களை ஆராய்ந்து குறைந்தபட்ச அளவை நிர்ணயிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மருந்துகளினால் மட்டும் கட்டுப்படுத்தாமல், அதனுடன் உணவு முறையையும், உடற்பயிற்சியையும், ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறையையும் பின்பற்றினால் எந்த பக்க விளைவும் ஏற்படாமல் ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
மேலும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெற்றிருக்கவேண்டும்.
இந்த நோயிற்கு தற்போது புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், நோயாளிகள் அச்சமடைய தேவையில்லை.
இருப்பினும் முப்பது வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் என இருவரும் தொடர்ந்து மூன்று மாதம் சர்க்கரை நோயிற்கான பரிசோதனையை மேற்கொண்டு, சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனையை பின்பற்றினால் நீரிழிவுநோயை கட்டுப்படுத்தலாம்.