உலகம்

இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா ! இன்று மாத்திரம் 3 பேர் பலி

கொரோனா தொற்றுக்கள்ளான 3 பேர் இன்றையதினம் இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பாணந்துறை பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இதேவேளை, உயிரிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த களனியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவம் இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்த நபரை தகனம் செய்யும் நடவடிக்கைகள் கொலன்னாவ பொதுமயானத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தத் தொற்றாளர்களில் கொழும்பிலேயே அதிகளவானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கொள்ளுப்பிட்டியில் மாத்திரம் 55 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம் கொழும்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கம் சுமார் ஆறு இலட்சம் மக்களுக்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வடைய வாய்ப்புள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவர் றுவன் விஜயமுணி தெரிவித்துள்ளார்.

எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட 400 பி.சி.ஆர். பரிசோதனையில் 19 பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் அண்ணளவாக நூற்றுக்கு 5 வீதமாக தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 646 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Hot Topics

Related Articles