உலகம்

இலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்

இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குணப்படுத்தக் கூடிய இந்நோயிலிருந்து பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் இலவச பரிசோதனைகளை நடத்துதல் என்பவற்றை இலக்காகக் கொண்டு வருடாந்தம் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி சர்வதேச இதய தினம் கொண்டாடப்படுகிறது.

தொற்றா நோய்களால் உலகலாவிய ரீதியில் 83 சதவீத மரணம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் மரணத்திற்கு பிரதான காரணியாக இருப்பது இதயம் மற்றும் இரத்த குழாயுடன் தொடர்புடைய பிரச்சினைகளாகும். இதனால் உலகலாவிய ரீதியில் வருடமொன்றுக்கு 17.9 மில்லியன் உயிரிழப்புக்கள் பதிவாகின்றன.

தொற்றா நோய்களால் பதிவாகின்ற மரணங்களில் 50 வீத மரணங்களுக்கான பிரதான காரணியாகவும் இதயம் மற்றும் இரத்த குழாயுடன் தொடர்புடைய பிரச்சினை காணப்படுகிறது.
சுகாதார முறைப்படி உணவு உட்கொள்ளாமை , செயற்பாடுகளில் மந்த நிலைமை, புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புகைப்பொருட்களை உபயோகித்தல் என்பன இதற்காக பிரதான காரணிகளாகவுள்ளன.

இதயத்தில் ஏற்படும் கோளாறுகள் தொற்றா நோய் என்பதோடு இதற்கான பிரதான காரணம் அதிக இரத்த அழுத்தமாகும். அளவுக்கு அதிகமான உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதே இதற்கான காரணமாகும்.

நாளொன்றுக்கு நபரொருவர் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் மாத்திரமேயாகும். எனினும் அதன் மூன்று மடங்கு உப்பை இலங்கையிலுள்ள மக்கள் உணவில் சேர்த்துக் கொள்கின்றார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 26.5 சதவீதமானோர் அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

இலங்கையில் அதிக இரத்த அழுத்தம் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களில் 35 சதவீதமானோர் உரிய முறையில் மருந்துகளை உட்கொள்வதில்லை என்பதோடு 30 சதவீதமானோர் தமக்கு அதிக இரத்த அழுத்தம் உள்ளது என்பதையே அறியாமலுள்ளனர்.

2016 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின் படி தொற்றா நோய்களால் பதிவாகும் மரணம் 83 சதவீதமாகும். இதில் 34 சதவீத மரணம் இதயம் மற்றும் இரத்த குழாயுடன் தொடர்புடைய பிரச்சினைகளினாலாகும். அதிக இரத்த அழுத்தமானது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்பதோடு , இதன் காரணமாக இதயம், மூளை மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உடலிலுள்ள முக்கிய பாகங்களும் பாதிப்படையும்.

உலகளாவிய ரீதியிலுள்ள மொத்த சனத்தொகையில் 1.13 பில்லியன் மக்கள் அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளதோடு , இந்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பகுதியினர் குறைந்த அல்லது மத்திய வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2015 தரவுகளின் அடிப்படையில் 4 ஆண்களில் ஒரு ஆணும் , 5 பெண்களில் ஒரு பெண்னும் அதிக இரத்த அழுத்தத்திற்கு உள்ளாவதாக இனங்காணப்பட்டுள்ளது. தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக 2025 இல் அதிக இரத்த அழுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளை 25 வீதத்தில் குறைப்பதற்கு சுகாதாரத்துறை எதிர்பார்க்கிறது.

தொற்றா நோய் ஏற்படுவதற்கான காரணிகளில் மாற்றக்கூடிய விடயங்களான சுகாதார முறைமையைப் பேணாத உணவு பழக்க வழக்கம் , செயற்பாட்டில் மந்த நிலைமை, புகைத்தல் மற்றும் மதுபாவனை என்பவற்றை தவிர்த்துக் கொள்ளலாகும்.

2015 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட STEPS கணிப்பீட்டுக்கு அமைய 26.5 சதவீதமானோருக்கு அதிக இரத்த அழுத்தம் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு , கிராமங்களில் வசிப்பவர்களை விட நகர்புறங்களில் வசிக்கும் வயதானோரே அதில் அதிகமாகவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதயம் மற்றும் இரத்தக் குழாயுடன் தொடர்புடைய நோய்களிலிருந்து எம்மை பாதிகாத்துக் கொள்ள முதலில் செய்ய வேண்டியது முறையான உணவு பழக்க வழக்கமே என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நாம் உட்கொள்ளும் உணவில் சோறு காணப்படும் அளவில் மூன்றில் ஒரு பங்கு மரக்கறி மற்றும் மீன் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக சோறுடன் கிழங்கு, கீரை, மரவள்ளிக்கிழங்கு, பலா போன்றவற்றை உட்கொள்ளலாம். உணவின் பின்னர் அளவான தண்ணீர் பருகுவதுடன் பப்பாளிப்பழம் சிறந்ததாகும்.

உணவிற்கு அடுத்தபடியாக மந்தமற்று செயற்திறனுடன் செயற்படுவதால் கூட இவ்வாறான பாதிப்புக்களிலிருந்து விடுபடலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அன்றாட வேலைகளை சுறுப்பான வேலைகளைச் செய்தல் , உடற்பயிற்சி செய்தல் என்பவற்றால் கூட எம்மால் இவற்றிலிருந்து தப்பிக்க முடியும்.

எமது நாட்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கு நடத்தல் , சைக்கிள் ஓட்டுதல், விளையாடுதல், யோகாசனம் என்பவற்றில் ஈடுபடலாம்.
ஆடைகளை சலவை செய்தல் , சமைக்கும் போது நவீன மின் உபகரணங்களைப் பயன்படுத்தி வேலையை இலகுவாக்குவதை விட எம்மால் செய்யக் கூடிய வேலைகளை சிரமம் பாராது நாமே செய்தால் அநாவசியமான உடல் பிரச்சினைகளுக்கோ அல்லது நோய்களுக்கோ ஆளாக வேண்டியிறாது.

இருதய நோய், இரத்தக்குழாய் பிரச்சினை, தொற்றா நோய், தண்ணீர்

Hot Topics

Related Articles