மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சிசுவின் தாயாரை சந்தேகத்தின் பேரில் இன்று வியாழக்கிழமை (17) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக 42 நாள் கொண்ட கோஷனி என்ற சிசு சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த தாயாரிடம் மேற்கொண்டதொடர் விசாரணையின் இறுதியில் மூத்த பிள்ளை மீது கொண்ட அன்பின் மன உளைச்சல் காரணமாக 41 நாட்களேயான தனது இரண்டாவது பெண் குழந்தையை கொன்று கிணற்றில் வீசியதாக வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது மூத்த பிள்ளைக்கு இரண்டரை வயது எனவும் அவர் தொடர்ந்து தாய்ப்பால் குடித்து வந்துள்ளதாகவும், அந்த நிலையில் இரண்டாவது பிள்ளை கருவுற்று பிறந்த பின் அவருக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போயுள்ளதனால் பிறந்த பிள்ளைக்கு தாய்ப்பால் வழங்கும்போது, மூத்தபிள்ளை என்னை முறைத்து பார்ப்பதுடன் தந்தையிடம் அம்மா தன்னை கவனிப்பதில்லை என தெரிவித்து வந்துள்ளார் எனவும் மூத்த பிள்ளை என்னிடம் வருவது குறைவடைந்துள்ளது இதனால் நான் குழப்பமடைந்திருந்தேன்.
இந்த நிலையில் கடந்த 15 திகதி சம்பவதினமான மாலை வீட்டில் எனது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கோவிலுக்கு சென்ற சமயம், நான் தனிமையில் இருந்தபோது கட்டிலில் படுத்திருந்த குழந்தையின் வாயில் துணியை திணித்து பின் வீட்டின் முன்பகுதியில் இருந்த கிணற்றில் வீசினேன்.
பின்னர் குழந்தை காணாமல்போயுள்ளதாக தெரிவித்தேன் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த தாயாரை கைதுசெய்ததுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உறவினர்கள் தனது மூத்த மகனை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றதாகவும் , கணவன் மர ஆலைக்கு சென்ற தருணம் தனிமையில் இருந்த வேளை பிள்ளையை கட்டிலில் கிடத்தி விட்டு குளியலறை சென்று வருகையில் குழந்தை காணாமல் போனதாக ஏற்கனவே குழந்தையின் தாய் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.