உலகம்

முகக் கவசம் பாதுகாப்பானதா? – மருத்துவ ரீதியான விளக்கம்

எம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சமும் அல்லது ஏதேனும் பக்க விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படுமோ! என்ற அச்சமும் தற்போது மக்களிடத்தில் உருவாகி இருக்கிறது.

அதே தருணத்தில் வாட்ஸ்அப் மற்றும் சில சமூக வலைதளங்களில் தொடர்ந்து முக கவசம் அணிந்தால் முகத்தில் உள்ள தோல்களில் பாதிப்பு ஏற்படும் என்ற செய்திகளும் வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்த மருத்துவ ரீதியான விளக்கமளிக்குமாறு சுவாசப்பாதை மற்றும் நுரையீரல் சிகிச்சை மருத்துவரான டொக்டர் தீபா செல்வியிடம் கேட்டோம்.

அவர் விவரிக்கையில்,”முக கவசம் அணிவதால் சுவாச பிரச்சனையோ, ஓட்சிஜன் குறைவோ ஏற்படாது. கொரோனா வைரஸ் உட்பட எந்த நோய் கிருமியும் பரவாது. அதே தருணத்தில் நீங்கள் அலுவலகத்தில் தனியாக பணியாற்றினாலும் அல்லது குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட வாகனத்தில் தனியாக பயணிக்கும் போதும் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் உங்களுடன் வேறு ஒருவர் பணியாற்றினாலும் அல்லது உங்களுடன் வேறு ஒருவர் வாகனத்தில் பயணித்தாலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

தரமான முக கவசம் என அறிவிக்கப் பட்டிருக்கும் n95 என்ற முக கவசத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சுவாச கருவியின் தரம் குறித்து சான்றளிக்கப்பட்டிருக்கிறதா? என்றும் வழிகாட்டலின் வழியில் அவை  பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை பரிசோதித்து பின்னரே பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இதை அணிபவர் வெளியேற்றும் சுவாசக்காற்று, அருகில் இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது.

அதே தருணத்தில் ஏனைய முகக் கவசங்கள் அணிந்திருந்தாலும் வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகள் உடலினுள்ளே செல்லவும், வெளியே வரவும் வாய்ப்பில்லை. சிலர் நீண்ட நேரம் முக கவசம் அணிவதால், குருதியில் ஓட்சிஜன் அளவு குறைந்து விடுமோ..! என்று கவலைப்படுகிறார்கள்.

அதற்கான வாய்ப்பு இல்லை. இத்தகைய முக கவசம் அணிவதன் மூலம் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவோ அல்லது அழுத்தமோ குறைவதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், தாதியர்கள் ,மருத்துவ ஊழியர்கள் போன்றவர்கள் 24 மணி நேரமும், இத்தகைய தருணங்களில் முக கவசம் அணிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவரை முகக் கவசங்களால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

எம்மில் பலர் முக கவசங்களை துணிகளை பயன்படுத்தி தயாரித்து, அதனை பயன்படுத்துகிறார்கள். துணியில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை நான்கு மணி தியாலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிறகு அதனை சுத்திகரித்த பின்னரே பயன்படுத்தலாம். ஒரு சிலர் தொடர்ந்து ஒரே முக கவசத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், நோய்த்தொற்று ஏற்படக்கூடும்.

அதே தருணத்தில் முக கவசத்தின் வெளிப்பகுதியை மட்டுமே கைகளால் தொட்டு அப்புறப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் முக கவசத்தின் உட்பகுதியை கைகளால் தொடக்கூடாது.

ஏனெனில் முக கவசம் அணிவதால் நாசித் துவாரங்களின் வழியாக உள்ளே இழுக்கப்படும் காற்றின் விசை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் முக கவசம் அணிந்து கொண்டு எம்மில் சிலர் பேசும்போது அந்த விசை அளவு சமப்படுத்தப்படுகிறது.

இவற்றையெல்லாம் விட ஓட்சிஜன் எனும் பிராண வாயு தசமம் 3 மைக்ரான் அளவிற்கும் குறைவானது. ஆனால் நோய் தொற்றை உண்டாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகள் தசமம் 3 மைக்ரான் அளவை காட்டிலும் அதிகமானவை. அதனால் முக கவசம் அணிந்திருந்தால் கிருமிகள் உடலுக்குள் செல்ல இயலாது. அதே தருணத்தில் ஓட்சிஜனை செல்ல அனுமதிக்கும்.

எனவே நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து பரிந்துரைக்கும் முக கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை, மக்கள் அனைவரும் தங்களுடைய ஆரோக்கியம் கருதியும், ஏனைய மக்களின் உடல் நலம் கருதியும் கட்டாயம் அணிய வேண்டும்.”என்றார்.

Hot Topics

Related Articles