உலகம்

இலங்கையில் கொரோனாவால் முதலாவது பெண் மரணம் – உயிரிழப்புக்கள் 8 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனாவால் பெண்ணொருவர் முதன்முறையாக உயிரிழந்துள்ள நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.


கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான 72 வயதுடைய எட்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருணாகல் – பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்நத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் கடற்படை சிப்பாய் ஒருவரின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்படுவதுடன், குறித்த பெண்ணுக்கு கடற்படை சிப்பாயின் ஊடாகவே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

இந்த பெண் சிறுநீரக தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது பெண்ணாக இவராவார்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இதற்கு முன்னர் உயிரிழந்த அனைவரும் ஆண்கள் என சுகாதார தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 721 ஆக உயர்ந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 523 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மேலும், 137 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன், 194 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Hot Topics

Related Articles