பிரிட்டனிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் குழந்தைகளை தாக்கிவரும் புதிய நோய் குறித்து அவதானித்து வருவதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய வைரஸ் குறித்து சர்வதேச ஊடகங்கள் மூலம் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சக அதிகாரியொருவர் நிலைமயை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் இலங்கையில் எவரும் அவ்வாறான நோயினால் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுடன் தொடர்புள்ள வழமைக்கு மாறான அழற்சிநோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிரிழப்பது சர்வதே அளவில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சிலர் பிரிட்டனில் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் மட் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.
கொரோனாவைரசிற்கும் ஒருவகை அழற்சி நோய்க்கும் இடையிலான தொடர்புகள் குறித்து இங்கிலாந்து மற்றும் இத்தாலியை சேர்ந்த நிபுணர்கள் ஆராய்ச்சியை ஆரம்பித்துள்ளனர்.
கடும் காய்ச்சல் மற்றும் வீங்கிய தமனிகளுடன் மருத்துவமனைக்கு வரும் கைக்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்தே நிபுணர்கள் இந்த ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளனர்.
கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடஇத்தாலியின் மருத்துவர்கள் ஆசிய நாடுகளில் கவசாகி என அழைக்கப்படும் நோய்க்கான அறிகுறிகளுடன் பெருமளவு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.
ஒன்பது வயதிற்கு உட்பட்ட குழந்தைகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்பாதிப்புகள் எதுவும் இல்லாத குழந்தைகள் சிலர் உயிரிழந்துள்ளனர் என பிரிட்டனின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது கொரோனா வைரஸ்- கொவிட் 19னால் உருவாக்கப்படுகின்ற புதிய நோய் என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள அவர் பாதிக்கப்பட்டுள்ள சிலரில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படாமையினால் நாங்கள் இது குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இது குறித்து கவலையடைந்துள்ளோம், இது குறித்து நாங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் பிரிட்டனின் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இது குறித்து பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பிரிட்டனின் உள்துறை அமைச்சர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வைரஸ் எவ்வளவு வேகமாக நகர்கின்றது என்பதை இது புலப்படுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.