உலகளாவிய ரீதியில் நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கருத்தடை சாதனங்கள் கிடைக்காமையால், உலகளாவிய ரீதியில் 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஆக்கிரமித்து வரும் நிலையில், உலக நாடுகயில் பெரும்பாலானவை தற்போதும் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த ஊரடங்களின் தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகுள் மக்கள்தொகை நிதியம் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்விலேலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனாவின் தாக்கமும், அதன் எதிர்விளைவுகளும் உலகம் முழுவதும் எவ்வாறு வியாபிக்கும் என்பது தொடர்பில் எவருக்கும் இன்னும் உறுதியாக தெரியவில்லை.
அதே சமயத்தில், பெண்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்காவிட்டால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்த இந்த ஆய்வை வெளியிட்டுள்ளோம்.
கொரோனா பாதிப்பு காரணமாக, உலகளவில் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது.
பெண்களும், கொரோனா வைரஸ் தாக்கும் என்ற அச்சத்தில், அவர்களின் வழக்கமான பரிசோதனைகளுக்கு கூட வைத்தியசாலைகளுக்கு செல்வதில்லை.
ஊரடங்கு கட்டுப்பாடுகளால், பொருட்கள் வருகை தடைப்பட்டுள்ளது. இதனால் கருத்தடை சாதனங்களுக்கு ஒவ்வொரு நாடுகளிலும் பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
உலகம் முழுவதும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 114 நாடுகளில் சுமார் 45 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், தட்டுப்பாடு காரணமாக, 4 கோடியே 70 இலட்சம் பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காத நிலை ஏற்படும். இதனால், எதிர்வரும் மாதங்களில், 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்களும், பெண்களும் வீட்டிலேயே இருப்பதால், மோதல் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
6 மாதங்களில், 3 கோடியே 10 லட்சம் மோதல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என்று கணித்துள்ளோம். 3 மாதங்கள் ஊரடங்கு நீடித்தால், மேலும் ஒரு கோடியே 50 லட்சம் மோதல் நிகழ்வுகள் நடக்கும்.
அத்துடன், குழந்தை திருமணங்கள் லட்சக்கணக்கில் அதிகரிக்கவும் இந்த ஊரடங்கு வழிவகுக்கும். இவற்றையெல்லாம் தடுப்பதற்கு அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.