உலகம்

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 31 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 619 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணியாகும் வரை 619 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்திற்குள் 31 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த எண்ணிக்கை 619 ஆக உயர்ந்தது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 31 பேரில் 21 பேர் கடற்படையினர் எனவும் 4 பேர் இராணுவத்தினர் எனவும் மிகுதி 6 பேர் கடற்படையினருடன் தொடர்புள்ளவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை 8.00 மணியாகும் வரை பதிவான தொற்றாளர்களில் 206 பேர் வெலிசறை கடற்படை முகாமின் கடற்படை வீரர்களாவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

‘ இதுவரை வெலிசறை கடற்படை முகாமுடன் தொடர்புபட்ட 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதில் 88 பேர் விடுமுறைகளில் வீடுகளில் இருந்த போது, அவ்வந்த பகுதி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது. ஏனைய 148 வீரர்களுக்கும் வெலிசறை கடற்படை முகாமிற்குள் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனைவிட கடற்படை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. ‘ என கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் உயர் அதிகாரி ஒருவர் வீரகேசரிக்கு தெரிவித்தார்.

நேற்று மட்டும் பாதிக்கப்பட்ட மேலும் எண்மர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.

அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மேலும் 478 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையிலும் சடுதியான அதிகரிப்பை அவதானிக்க முடிகின்றது.

கொரோனா தொற்று இருக்கலாம் எனும் சந்தேகத்தில் 317 பேர் நாடளாவிய ரீதியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் நாடளாவிய ரீதியில் 32 வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles