உலகம்

யுகசக்தியின் “சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தல் 2020” பேரணி

“சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தல் 2020” எனும் தொனிப்பொருளில் சமூக வலுவூட்டல் அமைப்பான யுகசக்தியினால் கவனயீர்ப்பு பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


7000 பேர் வரை பங்கேற்ற இப் பேரணியில் சுமார் 90 சதவீதமானவர்கள் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. நா. வேதநாயகன், நியுசிலாந்தின் உயர் ஸ்தானிகர் திரு. சேனக சில்வா மற்றும் யுகசக்தி பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி. செலினா பிரேம் குமார் ஆகியோரும் இந்த நடையில் பங்கேற்றனர்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்ட உரிமை கோரிக்கைகள் அரங்கத்தில் வாசிக்கபட்டு மனு வடிவில் இரு சிறுவர்களால், யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. நா. வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது.


முற்றவெளி பகுதியில் ஆரம்பமாகிய இந்த நடை, யாழ்ப்பாணம் துரையப்பா மைதானம் வரை இடம்பெற்றது. இதன் போது வரவேற்புரை மற்றும் முடிவுரை ஆகியன தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சிறுவர்களால் நிகழ்த்தப்பட்டமை விசேட அம்சமாகும். சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த நடை இடம்பெற்றது.

பெண்களுக்கு வலுவூட்டல் என்பது தொடர்பில் இந்த திட்டத்தினூடாக முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. குடும்பங்கள் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டதுடன் சிறுவர்களுக்கு பாதுகாப்பான சிறுவர் பராயத்தை அனுபவிப்பது, பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்துவது தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது. மேலும், சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டலை தக்க வைத்துக் கொள்வதற்கு பெண்கள் வலுவூட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.


இந்த நடவடிக்கை தொடர்பில் யுகசக்தி பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி. செலினா பிரேம் குமார் கருத்துத் தெரிவிக்கையில், “சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் எமது முதலாவது கவனயீர்ப்பு நடை பவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் சிறுவர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்பு எனும் வகையில் சமூகத்திலுள்ள தாய்மார் மற்றும் பெண்களை வலுவூட்டுவதன் மூலம் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதை எம்மால் உணர முடிந்தது.

பெருமளவான பெண்கள் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர், பெரும்பாலும் கலாச்சாரம், அச்சம் காரணமாக அல்லது எதிர்காலம் கருதி வெளியே தெரிவிக்காமல் இவற்றை எதிர்கொள்கின்றனர்.

அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யாமல் அவை தொடர்பில் விழிப்புணர்வூட்டுவது என்பது எவ்வித பயனையும் வழங்காது என நாம் கண்டறிந்தோம். சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் ஆகியவற்றை நிலைநிறுத்திக் கொள்வதற்கு பெண்கள் வலுவூட்டப்பட வேண்டும். தற்போதைய திட்டத்தின் ஆரம்பமாக இது அமைந்திருந்ததுடன் “பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகள் மற்றும் பாதுகாத்தல்” என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.” என்றார்.

அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மனுவில் பாலினம், பாலின வேறுபாடுகள் மற்றும் பாலினக் கல்வி தொடர்பில் பாடசாலை மட்டத்திலிருந்து அறிவூட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்ரூபவ் பெண்கள் மற்றும் சிறுவர்கள் சுரண்டப்படுவதை தவிர்ப்பதற்கு கலாச்சாரம் மற்றும் சமயசார் பங்குபற்றல் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல்ரூபவ் போதைப் பொருட்களுக்கு எதிராக சகல மட்டங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளல், சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்ட விதிமுறைகள் பற்றி விளக்கமளித்தல்கள்ரூபவ் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் மனஉளைச்சலை குறைக்கவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல்ரூபவ் பெண்கள் மற்றும் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை காலத்தை குறைப்பது, மற்றும் அவர்கள் சார்பில் சட்டத்தை செயற்படுத்துவது மற்றும் உடனடியாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட ரீதியில் செயலாற்றி தக்க தண்டனைகளை பெற்றுக் கொடுத்தல் என்பன வலியுறுத்தப்பட்டிருந்தது.


யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. நா. வேதநாயகன் கருத்துத் தெரிவிக்கையில், “இன்று ஒரு வித்தியாசமான, பாராட்டத்தக்க ஒரு நாள். 7000 இளைஞர்கள், யுவதிகள், மற்றும் சிறுவர்கள் பங்கேற்புடன் ஒரு பிரமாண்டமான ஒரு நிகழ்வும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் பாலியல் வன்முறைகளை நிறுத்தல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் சுரண்டப்படுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமைக்காகவும் இந்த பேரணியை ஒழுங்கு படுத்தியமைக்காகவும் யுகசக்தி மற்றும் அதன் நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். பொது மக்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவது தொடர்பிலும் எதிர்ப்பு வெளியிடுவது தொடர்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பிரமாண்டமான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.” என்றார்.

யுகசக்தி என்பது வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமூக மட்டத்தில் காணப்படும் சிறு அளவிலான பாற் பண்ணை செயற்பாட்டாளர்கள் மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ளவர்களுடன் செயலாற்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பங்களிப்பு வழங்கும் அமைப்பாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர் தன்னிறைவை உறுதி செய்வதற்காக சமூக மட்டத்தில் அர்ப்பணிப்பான சூழலுக்கு நட்பான வியாபாரங்களை உருவாக்குவதில் இந்த அமைப்பு அக்கறை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுடன் கைகோர்த்து சமத்துவத்தை ஊக்குவிப்பதுடன் அன்பு, சமாதானம் மற்றும் நீதி ஆகியவற்றினூடாக ஆரோக்கியமான சமூகங்களை உறுதி செய்வதையும் இலக்காகக் கொண்டுள்ளது. யுகசக்தி தொடர்பான மேலதிக தகவல்களை அதன் இணையத்தளத்தில் பார்க்கலாம். www.yugashakthi.org

Hot Topics

Related Articles