நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பாதியில் விட்ட பரதநாட்டியத்தை தற்போது கற்று வருவதாக தெரிவித்திருக்கிறார்.
கொரோனா தனிமையின் காரணமாக திரை நட்சத்திரங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த தருணத்தை தங்களுடைய துறையில் மேலும் மிளிர, தகுதிப்படுத்திக் கொள்ளும் தருமாணக பாவித்து, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது பரதநாட்டியத்தை இணைய தளம் மூலமாக கற்று வருவதாக தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில்,“நான் எப்போதும் ஏதேனும் பணிகளை செய்து கொண்டே இருப்பேன். ஒரு போதும் சும்மா உட்கார்வதில்லை.
முதன்முதலாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டவுடன், மனதளவில் சோர்வாக உணர்ந்தேன். ஏனெனில் எப்போதும் படப்படிப்பு, ஏனைய பணிகள் என்று பரபரப்பாகவே இருப்பேன்.
அந்தப் பரபரப்பு இல்லை என்றவுடன் சோர்வடைந்தேன். ஆனால் தற்பொழுது கிடைத்திருக்கும் நேரத்தில், எமக்காக தேடிவந்த இரண்டு திரைக்கதைகளை முழுமையாக வாசித்தேன்.
அத்துடன் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சமையலறையில் நுழைந்து, எமக்குப் பிடித்த உணவை சமைத்தேன். அதன்பிறகு எம்முடைய அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, பாதியில் கைவிட்ட பரதநாட்டியத்தை, சென்னை கலாசேத்ராவைச் சேர்ந்த நடன கலைஞர் ஒருவர் மூலம் இணையதளத்தில் தற்போது கற்று வருகிறேன்.
இதற்காக தினமும் இரண்டு மணி நேரம் செலவிடுகிறேன். மீதமுள்ள நேரங்களில் எம்முடைய பயிற்சியாளர் அறிவுரையின் பேரில் உடற்பயிற்சி செய்கிறேன். இதன்பிறகும் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சித் தொடர்களையும், சில ஆங்கில படங்களையும் பார்த்தேன்.
தற்போது கிடைத்திருக்கும் தனிமையால் சுற்றுப்புற சூழல் மிக இனிமையாக இருக்கிறது. அதிசயமாக காலையில் பறவைகளின் சத்தம் கேட்டேன்.
அப்போது இந்த ஊரடங்கு உத்தரவு,காற்று மாசினை குறைத்து, சுற்றுப்புற சூழலை தூய்மைப்படுத்தி இருப்பதையும் உணர்ந்தேன். அத்துடன் எதிர்காலம் தொடர்ந்து நன்றாக இருக்கும் என்ற நேர்மறையான எண்ணத்துடன் தொடர்ந்து பிரார்த்திக்கவும் செய்கிறேன்.” என்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் தற்போது விஜய்சேதுபதியுடன் ‘க/பெ. ரணசிங்கம் ’ மற்றும்‘ பூமிகா’ என்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.