உலகம்

அதிரடி அறிவிப்பு ! நாடு முழுவதும் நாளை ஊரடங்கு அமுல்

நாடளாவிய ரீதியில் நாளை 27 ஆம் திகதி திங்கட்கிழமை ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


கடந்த வெள்ளி 24 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளை அதிகாலை 5.00 மணிக்கு 21 நிர்வாக மாவட்டங்கள் தொடர்பில் தளர்த்தப்படவிருந்தது.

எனினும் நாட்டில் முப்படையினரின் விடுமுறைகளை ரத்து செய்து இன்று மாலை பாதுகாப்பு அமைச்சு அவசர தீர்மானத்துக்கு வந்த நிலையில், விடுமுறையில் உள்ள முப்படையினரை அவரவர் சேவை முகாம்களுக்கு திரும்புமாறு அவசர உத்தரவினை பிறப்பித்தது.

இந் நிலையிலேயே முப்படையினரை குறித்த முகாம்களுக்கு திரும்ப வசதியாகவும் அவ்வாறு திரும்பும் போது பொது மக்களுடன் எந்தக் கலப்பும் இல்லாமல் அவர்கள் முகாமுக்கு திரும்புவதை உறுதி செய்யும் விதமாகவும், நாளை முழுதும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர நேற்று இரவு ஜனாதிபதி செயலகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி நாளை முழுதும் நீடிக்கும் ஊரடங்கானது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் நாளை மறுதினம் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் பின்னர் மீள அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு 9 மணி நேர ஊரடங்கு வழமை போல் அமுல் செய்யபப்டும் எனவும் ஜனாதிபதி செயலகம் கூறியது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக மே முதலாம் திகதிவரை இரவு நேரத்தில் மட்டும் இரவு 8.00 மணியில் இருந்து அதிகாலை 5.00 மணி வரையிலான 9 மணி நேர ஊரடங்கு நிலை மட்டும் அமுல் செய்யப்படவுள்ளது.

முன்னதாக அனைத்து முப்படையினரதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இன்று மாலை அறிவித்திருந்தது. மறு அறிவித்தல் வரை முப்படை அதிகாரிகள், அப்படைகளில் பதவிகளிலுள்ளோரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

இதனடிப்படையில், தற்போது விடுமுறையிலுள்ள அதிகாரிகள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்ட பின்னணியிலேயே நாட்டின் ஊரடங்கு தளர்த்தல் நிலையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles