உலகம்

இலங்கையில் இன்றைய கொரோனாவின் ஆதிக்கம் ! – ஒரு பார்வை !

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இன்று இரவு 10.00 மணியுடன் நிறைவடைந்த 14 மணி நேரத்தில் 7 கடற்படையினர் உட்பட 32 பேர் வரை புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாகவும், அதன்படி இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இன்று அடையாளம் காணப்பட்ட 32 பேரில்  12 பேர் கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

அவர்களில் 11 பேர் வெலிகந்தை கந்தகாடு  தனிமைப்படுத்தல் முகாமில்  தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளதுடன் மற்றையவர் 12 வயதான சிறுவனாவான். அவர்  பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார். இந் நிலையில் பண்டாரநாயக்க மாவத்தை பகுதியிலும் அதனை அண்மித்த பகுதியிலும் பி.சி.ஆர். பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இன்று வெலிசறை  கடற்படை முகாமைச் சேர்ந்த 7 கடற்படை வீரர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் நால்வர்  வெலிசறை முகாமுக்குள்ளும் ஏனைய  மூவரில் இருவர் அவிசாவல்ல மற்றும் கொடகவல பகுதியிலும் மற்றையவர் மொனராகலை பகுதியில் வைத்தும்  இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனையோர் குறித்து விபரங்கள் வெளிப்படுத்தப்படாத நிலையில், இன்று மட்டும் பாதிக்கப்பட்ட 9 பேர் பூரண குனமடைந்து வீடு திரும்பியதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.  அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

 

இந் நிலையில் மேலும் 327 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளது.  அவர்கள்   நாடளாவிய ரீதியில் 31 வைத்தியசாலைகளில்  கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இதுவரை நாடளாவிய ரீதியில் மொத்தமாக 19 சுகாதார மாவட்டங்களில் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இதில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 150 ஐ கடந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 152 ஆகும்.  கொழும்பு மாவட்டத்தில்  கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்க மாவத்தையில் மட்டும் கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 95 வரை உயர்ந்துள்ளதாக கொழும்பு மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டப்ளியூ.கே. சந்தபால கூறினார்.

அதற்கு அடுத்தபடியாக  களுத்துறை மாவட்டத்தில் 59 பேரும்,  புத்தளத்தில் 35 பேரும் கம்பஹா மாவட்டத்தில்  33 பேரும்  இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 ஆகும்.  கண்டியில் 7 பேரும், இரத்தினபுரியில் 6 பேரும், குருணாலையில் 5 பேரும்,  கேகாலையில் நல்வரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாத்தறை, கல்முனை,பதுளை, அனுராதபுரம் ஆகிய சுகாதார மாவட்டங்களில்  தலா இருவர் வீதமும்,  காலி, மட்டக்களப்பு,  , வவுனியா, பொலனறுவை, மாத்தளை, மொனராகலை மாவட்டங்களில் தலா ஒவ்வொரு கொரோனா தொற்றாளர் வீதமும் அடையாளம் காணப்ப்ட்டுள்ளனர்.

இலங்கையில்  இன்று இரவு 10.00 மணி வரை அடையாளம் காணப்பட்ட 452 தொற்றாளர்களில், 3 வெளிநட்டவர்களும், வெளிநாட்டிலிருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பட்ட 38 பேரும் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வெலிசறை கடற்படை முகாமுக்குள் கண்டறியப்பட்ட  62 தொற்றாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

Hot Topics

Related Articles