உலகம்

50 வருடங்களுக்கு அதிகமாக அபிவிருத்தியை காணாமல் ஒரு வீதி !

கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களின் இன்றைய பிரதான பிரச்சினையாக வீதிப்பிரச்சினை காணப்படுகின்றது. எதற்கெடுத்தாலும் நகர்ப்புறங்களையே நாடவேண்டிய நிலையில், அதற்கான போக்குவரத்திற்கு உகந்த பாதைகள் காணப்படுவதில்லை. இதனால் தமது அன்றாட தேவைகள் மருத்துவ தேவைகள் என பல விடயங்களை பெற்றுக்கொள்ள பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர்.


நீண்டகால வீதிப்பிரச்சினையால் அல்லறும் பதுளை மாவட்டத்தின் நேப்பியர் தோட்ட மக்களின் வீதிப்பிரச்சினை இற்றைக்கு சுமார் 5 தசாப்தங்களுக்கும் அதிகமாக தீர்க்கப்படாமல் உள்ளது. உதாரணமாக நேப்பியர் கீழ்ப்பிரிவை பொறுத்தவரையில் அங்கு தரம் ஐந்து வரையான வகுப்புகள் கொண்ட பாடசாலை மாத்திரமே உள்ளது. அதற்கு பின்னர் நகர்ப்புற பாடசாலைக்கே செல்ல வேண்டும். அத்தோடு, அத்தியாவசிய பொருட்கொள்வனவு, மருத்துவ தேவைகள் மற்றும் அலுவலக வேலைகள் என சகலவற்றிற்கும் நகர்ப்புறத்தையே நாடிச் செல்ல வேண்டும்.

எனினும், நகரத்திற்குச் செல்லும் குறுக்குப் பாதை புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் பாம்பு புற்றுகள் ஆங்காங்கே கட்டப்பட்டு பாதை குன்றும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் செல்வதற்கு பிரத்தியேக பாதை காணப்பட்டாலும், பல வருடங்களுக்கு பின்னர் தற்போது ஆங்காங்கே தார் இடப்பட்டுள்ளன.

அதுவும் முறையாக மேற்கொள்ளப்படாததால் ஆங்காங்கே பள்ளங்களும் வெடிப்புகளும் காணப்பட்டு வீதிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. நேப்பியர் தோட்டத்திற்கு செல்லும் குறுக்கு வீதியையே மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். நகரத்திற்கு விரைவாக செல்லக்கூடிய ஒரே வழியாகவும் இந்த வீதியே காணப்படுகின்றது. இல்லாவிட்டால் முச்சக்கரவண்டிக்கு ஒருநேர சவாரிக்காக 250 ரூபாய் தொடக்கம் 300 ரூபாய்வரை செலுத்தவேண்டும். பின்தங்கிய இக்கிராமத்தில் வசிக்கும் இம்மக்கள், ஒருநேர சவாரிக்காக 300 ரூபாய் செலுத்தம் வசதிபடைத்தவர்கள் அல்லர்.


அந்தவகையில், கடந்த காலங்களில் ஆங்காங்கே வீதி செப்பனிடப்பட்டு சிறிய பேருந்தொன்று பயணத்தில் ஈடுபட்டது. மழைக்காலங்களில் பயணத்தில் ஈடுபட முடியாத அதேவேளை, மண்சரிவால் அவ்வப்போது குறித்த பேருந்து பயணிக்காது. நாளொன்றிற்கு இரண்டு தடவைகள் மட்டுமே குறித்த பேருந்து சேவையில் ஈடுபடும். இல்லாவிட்டால் குறுக்கு பாதையை பயன்படுத்தியே மக்கள் வெளியிடங்களுக்குச் செல்லவேண்டும்.
பின்தங்கிய நிலையில் வாழும் இத்தோட்ட மக்கள் ஒரு சவாரிக்காக 250 ரூபாயை வழங்குவது சிரமமான விடயம். அதுமாத்திரமன்றி ஆபத்துமிக்க பாதைகளிலேயே முச்சக்கரவண்டிகள் செல்கின்றன. இவ்வாறான நிலையில் குறுக்குப்பாதையும் கவனிப்பாரற்று கிடப்பதால் மக்கள் பயணிக்கமுடியாமல் உள்ளனர்.

மழைக்காலங்களில் மாணவர்களின் பாதணிகள் சேற்றுக்குள் புதையுண்டு செல்கின்றன. ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டு அபாயமான கட்டத்திலேயே வீதிகள் காணப்படுகின்றன.

இப்பிரச்சினை தொடர்பாக உரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தட்டிக்கழித்த நிலையில், நேப்பியர் தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சமுர்த்தி உதவி முகாமையாளர் கே.சிறிசேன இப்பிரச்சினை தொடர்பாக எமக்கு கருத்துத் தெரிவித்தார்.
கடந்த காலப்பகுதியில் இவ்வீதியை புனரமைக்க ஆரம்பித்த நிலையில், பின்னர் இடையில் கைவிடப்பட்டதென குறிப்பிட்டார். குறிப்பாக நகரத்திற்கு செல்லும் குறுக்கு வீதியை புனரமைப்பது அவசியமென்பதை ஏற்றுக்கொண்ட அதிகாரி, நிதி ஒதுக்கீட்டில் காணப்படும் சிக்கலே இப்பிரச்சிரச்சினையை தீர்க்க முடியாமல் உள்ளதென குறிப்பிட்டார்.

திடீரென நோய்வாய்ப்பட்டால் சுமார் 7 கிலோமீற்றர் தூரத்தில் காணப்படும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு வீதிகள் உகந்த நிலையில் இல்லை. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல்வாதிகள் பாராளுமன்றில் காணப்பட்டாலும் பெயருக்கு அவ்வப்போது வந்து சிறிய பகுதிகளுக்கு தார் போட்டுவிட்டு செல்வதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இவ்வாறான ஒரு பிரச்சினையே கம்பஹா மாவட்டத்தின் ஹிஸ்வெல்ல கிராமத்தில் காணப்படுகின்றது. கம்பஹா நகரிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் இந்த கிராமம் காணப்படுகின்றது.

சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் நெற்செய்கை, இறப்பர் செய்கை முதலான தொழில்களை செய்கின்றனர். இக்கிராமத்திற்கு செல்வதற்கு கிரிந்திவெல பகுதிக்கு பின்னர் பேருந்துகள் இல்லை. இங்கும் ஒரு சவாரிக்கு 200 ரூபாய் தொடக்கம் வழங்கவேண்டியுள்ளது.


இம்மக்களும் பாடசாலை, அலுவலக வேலை, வைத்தியசாலை போன்ற தேவைகளுக்கு நகரத்தை நோக்கி வரவேண்டியுள்ளது. பாதைகள் குன்றும் குழியுமாக இருக்கின்ற நிலையில் அதன் வழியே முச்சக்கர வண்டிகள் செல்லும்போது ஒருவித அச்ச உணர்விலேயே செல்லவேண்டியுள்ளது. குறிப்பாக நாம் சென்ற வாகனமும் அந்த வீதியில் விபத்திற்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான வீதியில் எவ்வாறு பயணிக்கின்றீர்கள் என அங்குள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் கேட்டபோது, ”என்ன செய்ய, இதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. திடீரென ஒருவர் நோய்வாய்ப்பட்டால் வைத்தியசாலைக்கு செல்லும்வரை அவரது உயிருக்கு உத்தரவாதமில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம்’’ என்றார்.


ஆசியாவின் அதிசயம் என்ற தோரணையில் சில நகர்ப்புறங்களை மாத்திரம் அழகுபடுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசாங்கம், கிராமப் பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக அக்கறை செலுத்துவதில்லை என்பதே இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.

தேர்தல் காலங்களில் வாக்குச் சேகரிப்பிற்காக வரும் அரசியல்வாதிகளை அதன் பின்னர் காணமுடிவதில்லை என்றும் இம்மக்கள் குறிப்பிடுகின்றனர். எந்தவொரு தேவைக்கும் போக்குவரத்து என்பது மிகவும் முக்கியம். அதனை சீராக மேற்கொள்ள உரிய வீதிகள் அவசியம். 50 வருடங்களாக ஒரு கிராமத்தின் வீதி உரிய அபிவிருத்தியை எட்டாமல் காணப்படுகின்றது என்பது சாதாரணமான விடயமல்ல. கிராமப்புற வீதிகள் கவனிப்பாரற்று ஆபத்தான நிலையில் இருப்பது அம்மக்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையையே காட்டுகின்றது. இதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்திற்கொண்டு இம்மக்கள் பயணிக்கும் வீதியை புனரமைத்துக்கொடுப்பது அவசியம்.

கலாவர்ஷ்னி கனகரட்ணம்

Hot Topics

Related Articles