இளம் ஊடகவியலாளர்கள் சோடிகளாக இணைந்து தங்களது கலாச்சார மத நம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட சமூகத்தில் தங்கியிருந்து அவர்களது கலாச்சார விழுமியங்களை புரிந்து கொள்வதுடன் இலங்கையில் பல்வகைத்தன்மையை ஏற்று அதனை மற்றவர்களுக்கும் தங்களது மோஜோ கதைகள் மூலம் தெரியப்படுத்துவதற்கான சமாதான ஊடகப்படையணிக்கான ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி இடம்பெற்றது.
MediaCorp இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் 2019/20 இல் 35 இளம் ஊடகவியலாளர்கள் சமாதான ஊடகப்படையணிக்கான 5 நாட்கள் பயிற்சி அண்மையில் நிறைவுபெற்றது.
இலங்கையின் 16 மாவட்டங்களிலிருந்து ஊடகப்படையணி புலமைப்பரிசில் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 35 இளம் ஊடகவிலாளர்கள் முதல் கட்டமாக இந்த 5 நாள் பயிற்சிநெறியில் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது சமாதான ஊடகவியல், முரண்பாட்டு ஊடகவியல், ஊடகவியல் தொழில் தருமம் மற்றும் பாலுணர்வு ரீதியான அறிக்கையிடல் போன்ற தலைப்புக்களில் கலந்துரையாடல்களும், விவாதங்களும் இடம்பெற்றன.
மேலும் தற்போது இலங்கையில் பிரபல்யம் அடைந்து வருகின்ற மோஜோ பற்றிய பயிற்சியில் அடிப்படை காட்சியமைப்பு, மூன்றாவது விதி, கெமரா மூமென்ட்ஸ், காட்சி தொடரமைப்பு, கதை உருவாக்கம் போன்ற தலைப்புக்களில் நடைமுறைப்பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், அவற்றை பரீட்சித்துப் பார்ப்பதற்கு ஒரு நாள் கள விஜயமும் மேற்கொள்ளபட்டது.
இதன் போது பயிற்சியாளர்கள் தங்களது தொலைபேசியினை பயன்படுத்தி 34 சிறு வீடியோ கதைகளை உருவாக்கியதுடன் அவற்றை தங்களது சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்தார்கள்.
இந்தப் பயிற்சி நெறியில் பிரபல ஊடக நிபுணர்களான கே.டபிள்யூ. ஜனரஞ்சன, ராதிகா குணவர்த்தன, கே.சாரங்க போன்றோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சியின் நிறைவில் இளம் ஊடகவியலாளர்கள் தங்களது கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகளுக்கு முற்றாக மாறுபட்ட கலாச்சார மத நம்பிக்கையுள்ள நண்பருடன் இணைந்து 7 நாட்கள் தங்கியிருந்து குறுக்கு கலாச்சாரங்களை புரிந்து கொள்வதற்கு முயற்சிப்பதுடன், இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற வகையில் கதைகளை உருவாக்கி அதன் மூலம் தேசிய கலந்துரையாடலை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுமாதான ஊடகப்படையணி என்ற எண்ணக்கருவானது இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு புத்தாக்க முயற்சியாகும். இங்கு இளம் ஊடகவியலாளர்கள் சோடிகளாக இணைந்து தங்களது கலாச்சார மத நம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட சமூகத்தில் தங்கியிருந்து அவர்களது கலாச்சார விழுமியங்களை புரிந்து கொள்வதுடன் இலங்கையில் பல்வகைத்தன்மையை ஏற்று அதனை மற்றவர்களுக்கும் தங்களது மோஜோ கதைகள் மூலம் தெரியப்படுத்துவதற்காக உருவாக்ப்பட்டுள்ள ஒரு அணுகுமுறையாகும்.
இது முதன் முதலாக 2018 ஆம் ஆண்டில் பரீட்சித்துப் பார்த்து வெற்றியும் கண்டுள்ள ஒரு அணுகுமுறையாகும். இதன் போது சுமார் 34 இளம் ஊடகவிலாளர்கள் பயிற்சி பெற்று 70 ற்கும் மேற்பட்ட கதைகளை உருவாக்கி அவை சமூக ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் அதிகமாகப் பகிரப்பட்டன. 2019 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற 24 இளம் ஊடகவிலாளர்கள் தங்களது களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களும் சுமார் 60 ற்கும் மேற்பட்ட கதைகளை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பல்வேறுபட்ட கலாச்சாரங்களைச் சார்ந்த நண்பர்களுடன் தொடர்ந்து 5 நாட்களுக்கு தங்கியிருந்து பழகுவதற்கு கிடைத்தது அவர்களைப்பற்றிய புரிந்துணர்வையும், என்னிடமிருந்த சந்தேகங்களையும் நீக்கியது. இது அவர்களுடன் மேலும் 7 நாட்கள் அவர்களது பிரதேசத்தில் தங்கி இருக்கும் போது மேலும் அதிகரிக்கும் என நம்புகின்றேன். இது தான் இன்று எமது நாட்டிற்கு தேவையான ஒன்றாகும் என வென்னப்புவைச் சேர்ந்த கமலி தெடிகம குறிப்பிட்டார்.
மோஜோ என்ற புதிய ஊடகக் கருவி தொடர்பான முழு அறிவையும் எமக்கு இந்த 5 நாட்கள் பயிற்சியில் முழுமையாக பெறக்கூடியதாக இருந்தது. இது பிரதான ஊடகங்களை மாத்திரம் தங்கியிருக்காது ஓரங்கப்பட்ட மக்களது பிரச்சினைகளை இனம் கண்டு ஒரு பிரஜை ஊடகவியலாராக அவர்களுக்காக குரல் கொடுப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என நம்புகின்றேன் பயிற்சியில்க கலந்துகொண்ட கே.எம் ரஸுல் தெரிவித்தார்.
USAID ஆதரவுடன், சர்வதேச ஆராய்ச்சி பரிவர்த்தனை வாரியம் (IREX) ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுவூட்டலின் (MEND) ஒரு பகுதியாக இந்த திட்டத்தை இலங்கை மேம்பாட்டு பத்திரிகையாளர் மன்றம் (SDJF) ஏற்பாடு செய்தது.
மேலும் தகவலுக்கு, www.ldjf.org ஐப் பார்வையிடவும் அல்லது info@ldjf.org/ இல் மூலம் 0112 806265 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.