இளம் ஊடகவிலாளர்களின் கலாச்சாரத் தடைகளை விமர்சன ரீதியாக உற்று நோக்கி மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்வதன் மூலம் நாட்டின் பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொண்டு ஊடகவியல் திறன்களை பாவித்து நாட்டின் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமே இளம் ஊடகவியலாளர்களுக்கான ஊடகப்படையணி புலமைப்பரிசில் திட்டம் என SDJF இன் தவிசாளர் பேராசிரியர் பத்மசிறீ வனிகசுந்தர தெரிவித்தார்.
இதேவேளை, இளம் ஊடகவியலாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப பயிற்சிகளையும் போதுமான வழிகாட்டல்களையும் வழங்குவதன் மூலம் யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தி “இலங்கையர்” என்ற ஒரே அடையாளத்தை ஏற்படுத்துவதற்கு ஊடகங்கள் பங்களிப்புச் செய்வதனை இந்த நிகழ்ச்சித்திட்டம் ஊக்கப்படுத்துகின்றது என SDJF நிறுவனத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி முகமட் அஸாட் தெரிவித்தார்.
இளம் ஊடகவியலாளர்களுக்கான ஊடகப்படையணி புலமைப்பரிசில் திட்டத்தின் 2 ஆம் கட்ட 5 நாள் வதிவிடப் பயிற்சியானது அண்மையில் நீர்கொழும்பில் இடம்பெற்றது.
இந்த பயிற்சியில் நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 25 இளம் ( 12 சிங்கள, 11 தமிழ் மற்றும் 2 முஸ்லிம்) ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள்.
இந்த செயற்றிட்டமானது இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினாலும் (SDJF), ஐரெக்ஸ் (IREX) எனும் சர்வதேச நிறுவனத்தினாலும் ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிதியுதவியுடனும் “ஜனநாயக இலங்கைக்கான ஊடகங்களை வலுப்படுத்தல்” (Media Empowerment for a Democratic Sri Lanka) எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டாவது வருடமாகவும் இடம்பெற்றது.
ஊடகப்படையணி புலமைப்பரிசில் திட்டமானது இளம் ஊடகவியலாளர்களை குறுக்கு கலாச்சாரங்களை அனுபவ ரீதியாக புரிந்து கொண்டு, தங்களது கலாச்சார தடைகளையும் தாண்டி நாட்டின் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை இனம் கண்டு அதற்கூடாக தேசிய கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இங்கு தெரிவு செய்யப்பட்ட ஊடகவிலாளர்கள் தங்களது இனம், மதம், கலாச்சாரம், பிரதேசம் போன்றவற்றில் முற்றிலும் வேறுபட்ட இன்னுமொரு ஊடகவியலாளர் நண்பருடன் 7 நாட்கள் தங்கியிருந்து அவர்களது கலாச்சார விழுமியங்களை புரிந்து கொண்டு அப்பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளை கூட்டு ஊடகவியலின் மூலம் கதைகளாத் தொகுத்து வெளியிடுவார்கள்.
இதன் ஆரம்ப நிகழ்வில் SDJF நிறுவனத்தின் தவிசாளர் பேராசிரியர். பத்மசிறீ வனிகசுந்தர, திட்ட பணிப்பாளர் சட்டத்தரணி முஸ்தபா.எம்.அஸாட், இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் மேலதிகப் பணிப்பாளர் ரீ.எம்.ஜி.சந்திரசேகர மற்றும் IREX நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் திரு.ஆர்.கனிஸ்க ஆகியோரும் பங்குபற்றினர்.
போராசிரியர். வனிகசுந்தர உரையாற்றும் போது “குறித்த நிகழ்ச்சித்திட்டமானது இளம் ஊடகவிலாளர்களின் கலாச்சாரத் தடைகளை விமர்சன ரீதியாக உற்று நோக்கி மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்வதன் மூலம் நாட்டின் பல்வகைத்தன்மையை ஏற்றுக் கொண்டு ஊடகவியல் திறன்களை பாவித்து நாட்டின் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாகும் என கூறினார்.
நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் தொடர்பான விளக்கங்களை SDJF நிறுவனத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி முகமட் அஸாட்டினால் பங்குபற்றுனர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
அவர் மேலும் உரையாற்றுகையில், இளம் ஊடகவியலாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப பயிற்சிகளையும் போதுமான வழிகாட்டல்களையும் வழங்குவதன் மூலம் யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தி “இலங்கையர்” என்ற ஒரே அடையாளத்தை ஏற்படுத்துவதற்கு ஊடகங்கள் பங்களிப்புச் செய்வதனை இந்த நிகழ்ச்சித்திட்டம் ஊக்கப்படுத்துகின்றது என கூறினார்.
இந்த 5 நாட்கள் பயிற்சியில் பங்குபற்றுனர்கள் சமாதான ஊடகவியல், மோதல் உணர்திறன் ஊடகவியல், பால்நிலை உணர்திறன் ஊடகவியல், ஊடகவியல் தர்மங்கள், கையடக்கத் தொலைபேசி கதையாக்கம், காட்சிகளின் வகைகள், கெமராவை உபயோகிப்பதற்குரிய கோணங்கள், தொடர் காட்சி, கதைகூறல், நேர்காணல் நுட்பமுறைகள், காட்சிப்படுத்தல் நுட்ப முறைகள், கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி நிழற்படம் (போட்டோ) எடுத்தல் போன்ற புதிய விடயங்களை கற்றுக்கொண்டனர்.
இளம் ஊடகவிலாளர்களை பயிற்றுவிப்பதற்காக சன்டே ஒப்சேவர் ஆசிரியர் தரிசா பஸ்டியன், ரீ.எம்.ஜி. சந்திரசேகர மேலதிகப் பணிப்பாளர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அனிதா பத்திரிகையின் ஆசிரியர் ஜனரஞ்சன, அனிதா பத்திரிகையின் உதவி ஆசிரியர் லசந்த றுகுணுகே, சட்டத்தரணி ராதிக குணரட்ண மற்றும் ஷான் விஜயதுங்க, இலங்கை ஊடகவிலாளர் கல்லூரியின் பணிப்பாளர் ஆகியோர் பங்குபற்றினர்.
இளம் ஊடகவியலாளர்கள் தாங்கள் வகுப்பறையில் கற்றவற்றை பரீட்சித்துப் பார்ப்பதற்காக களப்பயிற்சியில் ஈடுபட்டதுடன் ஒவ்வொரு ஊடகவிலாளர்களும் ஒவ்வொரு மோஜோ கதைகைளை உருவாக்கியிருந்தனர்.
இதற்கு முன்னர் நான் பல்வேறு ஊடகப்பயிற்சிகளில் பங்குபற்றியுள்ளேன். பல்லின மக்களுடன் கடமையாற்றியிருக்கிறேன். எனினும் எனது 20 வருட ஊடகத்துறை அனுபவத்தில் இவ்வாறான ஒரு வித்தியாசமான அனுபவத்தினை பெற்றுக் கொண்டது இதுவே முதல் தடவையாகும்.
மோஜோ எனும் புதிய செய்தி அறிக்கையிடும் வகையினை இனம் கண்டு கொண்டேன். இது மிகவும் எனது ஊடகத்துறையில் பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என சிலாபத்தில் இருந்து பங்குபற்றிய ஊடகவிலாளர் பிரசாத் பூர்ணிமால் தெரிவித்தார்.
இந்த புலமைப் பரிசில் நிகழ்சித்திட்டமானது வெவ்வேறு இன ஊடகவியலாளர்களுடன் பழகுவதற்கும், முற்றிலும் வேறுபட்ட ஒரு ஊடகவியலாளர் நண்பருடன் இணைந்து பணியாற்றுவதற்கு வழிவகுத்தமையானது நாட்டின் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முதல்படியென நான் கருதுகிறேன் என வவுனியாவிலிருந்து பங்குபற்றிய ஜனகன் நடராசா தெரிவித்தார்.
இந்தப்பயிற்சியின் பின்னர் சோடிகளாக்கப்பட்ட இரு இளம் ஊடகவியலாளர்கள் இணைந்து தங்களது பிரதேசத்திற்கு முற்றிலும் வேறுபட்ட பிரதேசத்தின் பிரச்சினைகளை இனம் கண்டு அதனை கையடக்கப்பேசி கதைகளாக உருவாக்கி சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து அதற்கூடாக தேசிய கலந்துரையாடலை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்வார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.