போதிய ஆதாரம் இல்லாததால் நெய்மாருக்கு எதிரான வழக்கை பிரேஸில் பொலிஸார் கைவிட்டுள்ளனர்.
பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மாருக்கு எதிரான பாலியல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் கைவிடப்படுவதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், இவர்மீது பிரேசிலைச் சேர்ந்த நஜிலா டிரின்டேட் என்ற 26 வயதான மொடல் அழகி கற்பழிப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.
நெய்மாருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரின் அழைப்பின் பேரில் நட்சத்திர ஹோட்டலில் சந்தித்த போது ஆக்ரோஷமாக நடந்து கொண்ட நெய்மார் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் பொலிசில் புகார் கொடுத்தார்.
ஆனால் அவருடன் பழக்கம் இருந்தது உண்மை, மற்றபடி தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று நெய்மார் மறுத்தார். தன்னிடம் இருந்து பணம் பறிக்கவே இந்த மாதிரி நாடகம் ஆடுவதாகவும் நெய்மார் கூறினார்.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக நெய்மார் ரியோ டி ஜெனீரோவில் உள்ள பொலிஸ் நிலைய தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கால்பந்து நட்சத்திரமான நெய்மாருக்கு எதிராக எழுந்த பாலியல் புகார், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெய்மாருக்கு எதிரான குற்றச்சாட்டை பிரேசில் பொலிசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நெய்மாருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை கைவிடுவதாக பிரேசில் போலீசார் தெரிவித்துள்ளனர்.