கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் கடந்த 3 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக ஆலயம் திறக்கப்பட்டது.
கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் இன்று காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆலயம் மக்களின் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது குறித்த குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டனர்.
பயங்கரவாதிகளால் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
இதேவேளை நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் மாத்திரம் 90 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.