ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும் என்று தென்னாபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரரான ஜக் கலீஸ் தெரிவித்துள்ளார்.


2019 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடரை பிரபலப்படுத்தும் வகையில் முன்னாள் ஜாம்பவான்களை உலகக்கிண்ணத்திற்கான தூதராக ஐசிசி நியமித்திருந்தது. அதில் ஒருவர் கலீஸ்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பவர்பிளே விதிமுறையால் பந்து வீச்சாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும் வகையில் விதிமுறையை மாற்ற வேண்டும் என்று கலீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலீஸ் கூறுகையில்,

‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 11 ஓவர் முதல் 40 ஓவர் வரை நான்கு வீரர்கள் மட்டுமே உள்வட்ட எல்லைக்கு வெளியே நிற்க வேண்டும். துடுப்பாட்டம் செய்வதற்கு சாதகமான பிளாட் ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் முதல் 10 ஓவர்களுக்குப் பிறகு ஐந்து களத்தடுப்பு வீரர்கள் வட்டத்திற்கு வெளியே நிற்கலாம் என்ற பழைய முறையை கொண்டு வர வேண்டும். பந்து வீச்சாளர்கள் எத்தனை வீரர்கள் அவுட் பீல்டிங் பகுதியில் நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த ஒரு மாற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன். இது நடந்தால் பந்து வீச்சாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆடுகளங்கள் 350 ஓட்டங்களுக்கு மேல் அடிப்பதற்கு சாதகமானதாக இருக்கக்கூடாது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here