உலகம்

தமிழச்சி தர்ஜினி சிவலிங்கத்தின் சாதனையுடன் அசத்தல் வெற்றி

லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் தனி ஒரு போட்டியில் அதிக கோல்கள் போட்ட வீராங்கனை என்ற சாதனையை தர்ஜினி சிவலிங்கம் நிலைநாட்டினார்.

சிங்கப்பூருக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுக்கான முன்னோடி ஆரம்பப் போட்டியில் 78 முயற்சிகளில் 76 கொல்களைப் போட்டதன் மூலம் தனி ஒரு போட்டியில் தனி ஒருவரால் அதிக கோல்கள் போடப்பட்ட சாதனையையே அவர் நிலைநாட்டினார்.

இலங்கைக்கு எதிரான ஏ குழு போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை கெய்ட்டின் த்வெய்ட்ஸ் போட்ட 67 கோல்களே இதற்கு முன்னர் இவ் வருடப் போட்டி ஒன்றில் தனி ஒருவரால் அதிக கோல்கள் போடப்பட்ட சாதனையாக இருந்தது.

சிங்கப்பூருடனான போட்டியில் அதி சிறந்த வீராங்கனையாகவும் தர்ஜினி சிவலிங்கம் தெரிவானார்.

முதல் சுற்றில் ஸிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 45 முயற்சிகளில் 44 கோல்களையும் வட அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 52 முயற்சிகளில் 47 கோல்களையும் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 19 முயற்சிகளில் 16 கோல்களைபும் தர்ஜினி போட்டுள்ளார்.

சிங்கப்பூரூடனான போட்டி வரை நான்கு போட்டிகளில் தர்ஜினி சிவலிங்கம் மொத்தமாக 183 கோல்களைப் போட்டு அதிக கோல்கள் போட்ட வீராங்கனைகள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.

முதல் சுற்றில் ஸிம்பாப்வே (49 க்கு 79), வட அயர்லாந்து (50 க்கு 67), அவுஸ்திரேலியா (24 க்கு 99) ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்த இலங்கை, 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் 13ஆம் இடத்தலிருந்து 16ஆம் இடம்வரை தீர்மானிக்கும் இரண்டாம் சுற்றுக்கான முன்னோடி போட்டிகளில் இலங்கை விளையாடி வருகின்றது.

இது இவ்வாறிருக்க, நடப்பு ஆசிய சம்பியன் என்ற வகையில் சிங்கப்பூருடனான போட்டி தங்களுக்கும் பெரும் அழுத்தத்தைக் கொடுத்ததாகவும் அப் போட்டியில் வெற்றி அடைந்தமை முழு அணிக்கும் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாகவும் இலங்கை அணித் தலைவி சத்துரங்கி ஜயசூரிய தெரிவித்தார்.

Hot Topics

Related Articles