உலகம்

ஆச்சரியப்படவைத்த புதுமணத் தம்பதியினரின் செயற்பாடு !

யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமையன்று இடம்பெற்ற திருமணத்தின்போது திருமண தம்பதியினரின் செயற்பாடொன்று அங்கு வருகைதந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மிகவும் குதூகலமாக குறித்த திருமண நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள டில்கோ ஹோட்டலில் இடம்பெற்றது.

 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மணமகன் வீ.ரோஷான் மணமகளான மா.றொஷாந்தி ஆகியோரின் திருமண வைபவம் பெரியோர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.

இந்நிலையில் அங்கு புது மணத் தம்பதியினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வொன்று அங்கு வந்திருந்தோரை பெரிதும் ஈர்த்தது.


குறிப்பாக திருமண நிகழ்வுக்கு வருகை தந்தவர்கள் அவ்விடத்தைவிட்டு வெளியேறும் போது வருகைதந்தமைக்கு நன்றி தெரிவித்து விசேட பரிசுகள் மற்றும் இனிப்புப் பலகாரங்கள் வழங்குவது வழக்கம்.

இருப்பினும் புதுமணத் தம்பதியினர்களான ரோஷான் மற்றும் றொஷாந்தி ஆகியோர் தங்களுடைய திருமண நிகழ்வுக்கு வருகை தந்தவர்கள் அங்கிருந்து திரும்பும் போது அவர்களுக்கு மா மரக்கன்றுகளை பரிசாக வழங்கி வைத்தனர்.


இந்தச் செயல் அங்கு வருகை தந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் இது தொடர்பில் பலராலும் பேசப்பட்டது.

இவ்வாறான செயற்பாடுகளை அங்கிருந்தவர்கள் வரவேற்றதுடன், இவ்வாறு மரக்கன்றுகளை வழங்கி சூழல் சமநிலை, மற்றும் புவி வெப்பமாதல், இயற்கைகளை பேணுவதற்குரிய விழிப்புணர்வுகளை புதுமணத் தம்பதியினர் வழங்கியதாக தெரிவித்தனர்.

தமது செயற்பாடு குறித்து புதுமணத் தம்பதியினரான திரு.திருமதி ரோஷான் தெரிவிக்கையில்,


நாம் எமது திருமணத்தை முன்னிட்டு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கும் எதாவது செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு எம் இருவர் மத்தியிலும் இருந்தது.

அந்த நிலையில் இவ்வாறு மரக் கன்றுகளை வழங்கினால் சிறப்பாக இருக்கும் என நினைத்தோம்.

கடந்த 30 வருட யுத்தத்தின் போதும் எமது நாட்டில் பல பயன்தரும் மரங்கள் அழிக்கப்பட்டன. தற்போதும் நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்கின்றோம் காடழித்தல் மற்றும் மனிதனின் செயற்பாடுகளால் பல்வேறு இடங்களில் பல மரங்கள் வெட்டப்படுகின்றன.


இதனால் எமது சூழலின் சமநிலை பாதிக்கப்படுவதுடன் புவிவெப்பமாதல், மழை வீழ்ச்சி குறைவு போன்ற உயிரினங்களுக்கு அச்சுறுத்தலான நிலைமை தோன்றுவிக்கப்படுகின்றன.

 

இந்நிலையில் எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. இவ்வாறான நிலைமைகளை கருத்தில் கொண்டு எமது திருமண நிகழ்வில் கலந்துகொண்டு எம்மை வாழ்த்திய அனைவருக்கும் நாம் மரக்கன்றுகளை வழங்கினோம்.

 


குறிப்பாக மா மரக்கன்றுகளை வழங்கியதன் நோக்கம் அனைவர் வாழ்வும் மாங்கனியைப் போன்று இனிமையாகவும் சுவையாகவும் ஏனையோருக்கு பலன்தரக்கூடிய வகையில் அமைய வேண்டும் என்பதற்காகவே நாம் இருவரும் இணைந்து மா மரக்கன்றுகளை வழங்கினோம் என்றனர்.

Hot Topics

Related Articles