அமெரிக்காவின் மோன்ட்டானா மாநிலத்தில் வீட்டுக்குள் நுழைந்து, கதவை உள்புறம் தாளிட்டுக் கொண்டு அலமாரிக்குள் தூங்கிய கரடியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பொலிஸார் உடனடியாக செயற்பட்டு அக்கரடியை வீட்டுக்குள் இருந்து வெளியேற்றினர்.
அமெரிக்காவின் மோன்ட்டானா மாநிலத்தில் உள்ள பட்லர் கிரீக் என்ற இடத்தில் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியில் சில நாட்களாக ஒரு கரடி சுற்றி வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டினுள் நுழைந்த அந்த கரடி, கதவை உள்புறமாக தாழிட்டுக் கொண்டது. அங்கிருந்த பொருட்களை தூக்கியெறிந்து அலங்கோலப்படுத்தியது.
பின்னர், உழைத்து களைத்த அசதியில் ஒரு அறையில் இருந்த துணிகள் வைக்கும் அலமாரியின் மீது தாவி ஏறி, கண்ணயர்ந்து உறங்கி விட்டது.
வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரையடுத்து விரைந்து வந்த பொலிசார் ஜன்னல் வழியாக கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி, கதவை திறந்து அதை வெளியேற்றினர்.
அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்திய கரடி அடிக்கடி சுற்றி வருவதால் வீட்டின் கதவுகளை யாரும் திறந்து வைக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.